அதிசயிக்க வைக்கும் அவுஸ்ரேலியா : சாகச சுற்றுலா போக ஆசையா?

சுற்றுலா தலங்களின் சொர்க்கபுரி அவுஸ்ரேலியா. தொழில்நுட்ப மிரட்டல், இயற்கையின் பேரெழில் என கலந்துகட்டியாக கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உண்டு.

சாகச விரும்பிகளுக்கு தீனியிடும் பல இடங்கள் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் கடலோர பிராந்தியம் அனைத்துவகை சாகச சுற்றுலாக்களின் மையமாக இருக்கிறது.

சாகசங்களில் முதன்மையானது பலூனில் பறந்து ரசிக்கும் த்ரில்லான பயணம். கோல்ட் கோஸ்ட் ‘ஹாட் ஏர் பலூன்’ பயணம் புது அனுபவத்தை தரும். பல ஆண்டுகளாக மிகப் பாதுகாப்பும் நேர்த்தியுமாக இந்த பலூன் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் காற்றின் தன்மைக்கு ஏற்ப பலூன் பறக்கவிடும் இடத்தை தேர்வு செய்கிறார்கள். இந்த பயணத்துக்கு அதிகாலைதான் உகந்த நேரம். ‘ஏவுதளத்துக்கு’ வேனில் அழைத்துச் செல்கிறார்கள்.

போகும்போதே, பலூனில் ஆட்களை ஏற்றிச்செல்லும் முறையை கண்டுபிடித்த விதம், பலூன் பயணம் வளர்ந்து மேம்பாடு அடைந்த வரலாறு ஆகியவற்றை விளக்கும் வீடியோவை காண்பிக்கிறார்கள்.

பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வழிமுறைகளும் கடைபிடிக்க வேண்டிய விதிகளும் தெள்ளத்தெளிவாக விளக்கப்படுகிறது. இதனால் சாகச பயணத்துக்கான தயார் மனநிலையை அப்போதே பெற்றுவிட முடிகிறது.

பரந்துவிரிந்த கட்டாந்தரை நிலப்பரப்பே பலூனை வானில் செலுத்துவதற்கான இடமாக இருக்கிறது. அதைத்தொட்டு வயல் வெளிகள். பல்வேறு வண்ணங்களில் பத்துக்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்படுவதற்கான ஆயத்த வேலைகளில் இருப்பதை பார்ப்பதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

நிலத்தில் தொய்ந்து படர்ந்துகிடக்கும் பலூனில் வாயுவை நிரப்பி பெரும்குமிழாக உருவாக்குகின்றனர். சடாரென பலூன் ராட்சத உருவில் நிமிர்ந்து நிற்கிறது. பலூனோடு சேர்த்த கயிற்று இணைப்பில் எட்டு பேர் நிற்கக்கூடிய செவ்வக வடிவிலான பிரம்புக் கூடை. ‘இதிலா ஏறி நிற்பது’ என்ற பயம் மெலிதாக எட்டிப்பார்க்கும். ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் கச்சிதமாக இருப்பது அந்த பீதியை நொடியில் போக்கிவிடும்.

நடுவில் பலூனை இயக்கும் பைலட். இரு பிரிவாக தடுப்புகள். இதனால் நெருக்கியடிக்காமல் சுற்றிச்சுற்றி நின்று எல்லா கோணங்களிலும் காட்சிகளை ரசிக்க முடியும்.

மெல்லிய காற்றில் சருகு பறப்பதை போல எந்த குலுங்கலும் இல்லாமல் அவ்வளவு மென்மையாக பலூன் மேலெழும்புகிறது. கூடையின் மையப்பகுதியில் விரிந்து படர்ந்து குவிந்திருக்கும் பலூனின் சரிநடுவில் நின்று பைலட் இயக்குகிறார். நெம்புகோல் போலொன்றை அழுத்தும்போது தீ ஜுவாலை பறந்து எழுகிறது. நெருப்பு உமிழும் வெப்பத்தை தாங்கும் வகையிலான நைலான் இழையாலானது பலூன். மெதுமெதுவாக பலூன் உயர்ந்து செல்லும்போது காலடியில் குறுகுறுக்கும்.

குளிர்ந்த காற்று முகத்தில் மோதும். சில நிமிடங்களிலேயே ஐந்தாயிரம் அடிக்கு மேல் பறக்க தொடங்கி விடுகிறது. அங்கிருந்து பார்க்கும்போது மீச்சிறு உருவங்களாக கால்நடைகளும் மனிதர்களும் தென்படுவார்கள். கடல் பரப்பையும் வானுயர்ந்த கட்டிடங்கள் நம் காலடியில் கிடப்பதையும் ரசிக்கலாம். பரந்துவிரிந்த முழுப்பரப்பையும் காண பரவசமாக இருக்கும்.

வானில் பறக்கும்போதே பைலட் எந்தெந்த நிலக்காட்சிகள் என வர்ணிக்கிறார். காற்றின் வேகத்துக்கு ஏற்ப இறங்குகிற இடத்தையும் தீர்மானிக்கிறார். இதற்காக விட்டுவிட்டு பல இடங்கள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். ஒரு தென்றலை போல பலூன் மேலெழும்பி போன இதம் இறங்குவதில் இருக்காது. பைலட் அறிவிக்கும்போதே அது தெரிந்துவிடும்.

‘பலூன் இறங்கி தரைதொடும்போது கூடை சின்னதாக தரையில் மோதும். அப்போது ஒருபக்கமாக பலூன் தளர்ந்து சாயும். இதனால் கூடை கங்காருவைப்போல தாவித்தாவி நகர வாய்ப்பிருக்கிறது. சிலசமயங்களில் கூடை கவிழ்ந்து உங்களை மூடவும் செய்யலாம். எனவே முதுகை கூடையோடு அழுந்த ஒட்டவைத்துக்கொள்ளுங்கள் எதிர்முனையில் கைகளை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்’ என பைலட் அறிவிக்கும்போதே, ஏறும்போது விலகிய கிலி மறுபடி வந்து தொற்றிக்கொள்ளும். அதற்காக தரையிறங்கலை அவ்வளவு ஆபத்து என கருத வேண்டாம்.

மெல்லிய குலுங்கலுடன் நிற்கலாம் அல்லது சொன்னதுபோல கங்காரு தாவல் தாவலாம். இவையெல்லாம் காற்றின் தன்மை, இறங்கு தள நிலை, பைலட்டின் இயக்கு திறனை பொறுத்து அமையும். ஒரு மணி நேர பலூன் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்ததை கொண்டாடும்விதமாக பாரம்பரியமிக்க ஓரெய்லி வைன் யார்டில் ஷாம்பெய்ன் பிரேக்ஃபாஸ்ட் தருவார்கள். பறந்து சாதித்த சான்றிதழ் கூட உண்டு.

அதிவேக படகு பாய்ச்சல்: கோல்ட் கோஸ்டின் அடுத்த சாகசம். ஜெட் போட்டிங். கடல் நீரை கிழித்து அதிவிரைவில் பறக்கும் படகு சவாரி இது. கோல்ட் கோஸ்ட் மெயின் பீச்சில் இருக்கும் ‘பாரடைஸ் ஜெட் போட்டிங்’ பல ஆண்டுகளாக  இந்த அதிவேகபடகு சவாரியை நடத்தி வருகிறது.

24 பேர் அமரும் ஜெட் போட்: முழு உடலையும் போர்த்துகிற பாதுகாப்பு கவசத்தை அணிந்துதான் படகுக்குள் ஏற முடியும். இருக்கையின் முன்னிருக்கும் கம்பியை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் போகிற வேகத்தில் தூக்கியெறியப்பட்டு கடலுக்குள் மூழ்கி விடுவீர்கள். ஜெட் போட் டிரைவர் சிறிய ஒலிபெருக்கியில் பேசியபடியேதான் படகை மின்னல் வேகத்தில் செலுத்துகிறார்.

வர்ணிக்க முடியாத அளவிலான வேகம், சடார் திருப்பங்கள், சுற்றிச் சுழன்றடித்து படகு உயர்ந்து எழுந்து மறுபடி கடல்பரப்பில் விழுந்து விரைவது உங்கள் அட்ரினல் சுரப்பிகளுக்கு தொடர் வேலை கொடுக்கும். இந்த சாகசங்களுக்கு இடையில் வேவ் பிரேக் செயற்கை தீவுகளுக்கு இடையே படகு பயணிக்கிறது. அத்தீவுக்குள் பெருந்தொழிலதிபர்கள் நிர்ணயித்த பெரும்கோடிகளில் மிளிரும் அரண்மனையொத்த வீடுகளை பார்த்தபடி செல்லலாம்.

டால்பின்களின் களியாட்டமும் காணக் கிடைக்கிறது. படகிலேயே சரியான கோணத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கிறது. அதிவேகத்தில் நீங்கள் அலறித்துடிப்பதையும் ரசிப்பதையும் அந்த காமிரா படம் பிடிக்கிறது. 55 நிமிட பயணம் முடித்து திரும்பியதும், அந்த அலறல் போட்டோவை கையிலேயே கொடுத்துவிடுகிறார்கள். சாகச விரும்பிகள் கட்டாயம் சென்று அனுபவிக்க வேண்டிய இடம் இந்த ஜெட் போட்டிங்.

திகிலூட்டும் தீம் பார்க் பலூன், படகு சாகசங்களை தவிர அதிரவைக்கும் விஷயங்கள் அடங்கிய தீம் பார்க்குகளும் இருக்கின்றன. அவுஸ்ரேலிய தீம் பார்க்குகளின் தலைநகரம் என கோல்ட் கோஸ்ட் வர்ணிக்கப்படுகிறது. டிரீம்வேர்ல்ட், சீ வேர்ல்ட், வார்னர் பிரதர்ஸ் மூவி வேர்ல்ட் என பலப்பல தீம் பார்க்குகள் உள்ளன. டிரீம்வேர்ல்ட் தீம் பார்க்குகளில் பல வடிவிலான பயங்கர ரோலர்கோஸ்டர்கள் உள்ளன.

டவர் ஆஃப் டெரர் 2 அதில் ஒன்று. இதேபோல் தடாலென விழவைப்பது போன்ற உணர்வை தரும் உலகின் மிகப்பெரிய ‘ஜெயின்ட் டிராப்’ எல்லாம் டிரீம் வேர்ல்ட் பார்க்கின் முக்கிய அம்சங்கள். சலிப்பான வாழ்க்கையிலிருந்து விலகி சாகசங்களை ருசிக்க விரும்புவோருக்கு ஏற்ற இடம் கோல்ட் கோஸ்ட்.