உங்கள் நேரம் யாருக்கானது?

தாய்க்கு, மனைவிக்கு, மகளுக்கு, சகோதரிக்கு, ஒரு பெண்ணுக்கு இதுவரை நாம் எதைத் தந்திருக்கிறோம்?

எதிர்பார்த்துக் காத்திருப்பவளோடு நேரம் செலவிடுகிறோமா? அடுப்புச் சூட்டில் வெந்து, அவள் நமக்காகத் தயாரிக்கும் உணவை மனதாரப் பாராட்டி இருக்கிறோமா, திறமைகளை வெளிப்படுத்தும்போது உற்சாகப்படுத்தியிருக்கிறோமா? நாள் முழுதும் நமக்காய் வீட்டில் உழைப்பவளின் வேலையில் பங்கெடுத்திருக்கிறோமா? அவளின் சின்னச்சின்ன ஆசைகளை உதாசீனப்படுத்தாமல் நிறைவேற்றி இருக்கிறோமா?

கொஞ்சம் யோசியுங்கள். நினைவில் இல்லையென்றாலும் இந்தக்குறும்படம் அதை நியாபகப்படுத்திவிடும்.

கால்கள் தேயத்தேய, வலிமை குன்ற வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும் இறைவிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணமாகட்டும். இதன் மூலம் ஒரு ஆணாவது தனது செயல்களை உணர்ந்தால் அதுவே இப்படத்தின் வெற்றி.

https://www.facebook.com/healthbasket.in/videos/1239050476171628/

ரோஹிதன் கதிரவனின் பின்னணி இசை, குறும்படத்தை முழுமையாக உள்வாங்கச் செய்கிறது.

கதையைத் தாங்கி நிற்கும் மனைவி பாத்திரத்தில் ரேணுகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொறியியல் முடித்து ஆர்வத்தால் விளம்பர நிறுவனமொன்றை நடத்திக்கொண்டிருப்பவர் ரேணுகா. படத்தில் நடித்தது குறித்துப் பேசும் அவர், ”இதுநாள் வரை பல பேருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்திருக்கிறேன்; ஆனால் இப்போது முதல் முறையாக திரைக்கு முன்னால் நடித்திருக்கிறேன். நீங்களும் நானும், பெரும்பாலான பெண்களும் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் என்பதால் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது” என்கிறார்.

உதட்டு உச்சரிப்போடு வசனங்கள் பொருந்தாமல் இருப்பதைக் கவனித்து சரிசெய்திருக்கலாம். பாக்யா சம்பத்தின் ஆங்கில விவரணைகள் அற்புதம். அதை தமிழிலும் கொடுத்திருக்கலாம்.

தன் பிரியத்துக்கு உரியவர்களுக்காக கடைசி மூச்சு வரை உழைக்கும் பெண்களால் தான் மனிதம் மலர்ந்திருக்கிறது; உலகம் தழைத்திருக்கிறது. உயிரோடு, உங்களையும் உருவாக்கும் பெண்களுக்காக, உள்ளத்தையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்வீர்களா?