இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள்

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கடைசி விக்கெட்டுக்கு ஹசில்வுட் உடன் இணைந்து ஸ்டார்க் அதிரடியாக விளையாடி கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்து விட்டார். ஸ்டார்க் 61 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 105 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 64 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் ஓ’கீபே வீசிய பந்தை தேவையில்லாமல் இறங்கி வந்து தூக்கினார். அதை வார்னர் கேட்ச் பிடித்து ராகுலை வெளியேற்றினார். அதன்பின் இந்தியா அடுத்த 12 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 155 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், அதன்பின் இந்தியாவால் மீண்டு வரஇயலவில்லை.

பேட்டிங் செய்ய கடுமையாக இருந்த ஆடுகளத்தில் அவரைத் தவிர யாரும் சரியாக விளையாடவில்லை. இதை கருத்தில் கொண்டு நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அரைசதம் அடித்தால் போதும் என்ற எண்ணத்தில் தூக்கி அடித்து விட்டார். அதன்விளைவு இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் வெளிப்படையாக லோகேஷ் ராகுல் அவுட்டுதான் திருப்புமுனை என்றனர்.

புனே போட்டிக்குப்பின் நாங்கள் பொறுப்புடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று விராட் கோலி கூறினார். ஆனால் பெங்களூருவில் நடைபெறும் 2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது. லோகேஷ் ராகுல் 90 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்தபோது லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் களத்தில் நின்றனர். உமேஷ் யாதவை வைத்துக் கொண்டு லோகேஷ் ராகுல் சதத்தை நோக்கி சென்றிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்தியா 200 ரன்னைத் தாண்டியிருக்கும். அப்படியில்லாமல் நாதன் லயன் பந்தை தேவையில்லாமல் அடித்து அவுட் ஆனார்.

முதல் இன்னிங்சில் இந்தியா 87 ரன்கள் பின்தங்கியிருந்தது. பொறுப்புடன் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்தார்கள். தொடக்க வீரர் அபிநவ் ஆட்டம் இழந்த பின்னர் லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார். 51 ரன்கள் எடுத்திருந்த அவர், ஓ’கீபே வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து, ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

முக்கியமான ஆட்டத்தில் அந்த பந்தை அவர் அடிக்க வேண்டிய அவசியமில்லை. நிலைத்து நின்று ஆடுவதுதான் முக்கியம். இந்த மாதிரியான நேரத்தில் அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவது அவசியம். அவரது அவுட்டால் அடுத்து வந்த விராட் கோலி (15), ஜடேஜா (2) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இனிமேலாவது அரைசதம் அடித்தால் போதாது, நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று லோகேஷ் ராகுல் தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம்.