தீர்மானம் 01
அரசியல் தீர்வாக இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு
வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர்.
ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு.
மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது.
தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை 1956ம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் வெளிப்படையாக வழங்கி வருகின்றனர். தேசம் என்ற அந்தஸ்த்தினை அவர்கள் இதுவரை விட்டுக் கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மறுபக்கத்தில் சிங்கள தேசத்தின் செயற்பாடுகள் பேரினவாதத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தை கைவிடுவதானது சிங்கள தேசத்திற்குள் தமிழ்த் தேசத்தை கரைப்பதற்கு தமிழ் மக்கள் விரும்பி ஒப்புதல் வழங்கும் செயற்பாடாக அமையும்.
தமிழ்த் தேசத்தின் இருப்பும் அதன் பாதுகாப்பும் தேசம் என்ற அங்கீகாரத்தை பெறுவதன் மூலமே உறுதி செய்யப்படும்.
எனவே அரசியல் தீர்வானதுதமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டித்தீர்வு அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி எமது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.
தீர்மானம் 2.
அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்
நீணடகாலமாக சிறீலங்கா அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க தொடர்ந்து போராடுவோம். தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா அரசின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானம் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும் எனக் கூறுகின்றது. இந்தக் கொடூர சட்டமானது சர்வதேச நியமங்களுக்கும், அடிப்படை மனித உரிமை கோட்பாடுகளுக்கும் எதிரானது. இச் சட்டத்தின் கீழேயே தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சிறைகளில் அடைத்தும் வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலேயே குறித்த சட்டம் நீக்கப்படல் வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசானது அத்தீர்மானத்திற்கு மதிப்பளித்து குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தை உடடினடியாக நீக்க வேண்டும். அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், அவர்களது குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.
தீர்மானம் 03
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களது விவகாரத்தில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைகோரி தொடர்ந்து போராடுவோம்.
யுத்த சூழலைப் பயன்படுத்தி பல்லாயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டமைக்கும், சரணடைந்தமைக்கும் நேரடிச் சாட்சியங்கள் உள்ளபோதும் கூட அவர்கள் பற்றிய தகவல்களை அரசு மறைத்து வருகின்றது.
இவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து போராடும்
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்றும் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் துன்பங்களுக்குள்ளும் வாழ்கின்றனர். தமது இயலுமைக்கு மேலான சுமைகளை சுமக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களால் அந்த சுமைகளை தாங்க முடியாது. தமிழ்ச் சமூகம் அதில் பங்கேற்க தொடர்ந்து முன்வரவேண்டும்.
தீர்மானம் 04
இன அழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களது உரிமைக்கும் நீதிக்குமான ஆயுதப் போராட்டம் இன அழிப்புச் செயற்பாட்டின் மூலம் ஸ்ரீலங்கா அரசினால் 2009 மே இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை என்னும் பெயரில் குற்றவாளியாக உள்ள ஸ்ரீலங்கா அரசின் முழுப்பொறுப்பில் உள்ளக விசாரணை பொறிமுறை வலியுறுத்தப்படுகின்றது. இவ் உள்ளக பொறிமுறையில் பெயரளவில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடைபெறவேண்டுமென பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.
சர்வதேச சமூகத்தின் கட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்நாட்டிலுள்ள நம்பகத் தன்மையுள்ள தனிநபர்களை இணைத்து உருவாக்கப்படுவதாகவே கலப்பு பொறிமுறை அமையவேண்டும். ஆனால் இங்கு சிறீலங்காவின் நீதித்துறையும், சட்டத்துறையும் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என ஐ,நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரே சுட்டிக்காட்டிய பின்னரும்கூட ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பில் சில வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்து கலப்பு பொறிமுறை என்னும் பெயரில் உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது.
ஜனாதிபதி பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச பங்களிப்பு இருக்க முடியாது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். குறிப்பக் 04-03-2017 அன்று யாழ் பலாலி இராணுவத் தளத்தில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போது தான் எந்தவொரு இராணுவ சிப்பாய்க்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்வோவதில்லை என தெரிவித்துள்ள நிலையிலும் அவர் மட்டுமன்றி நாட்டின் பிரதமர் மற்றும் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பொறுப்பாகவுள்ள சந்திரிக்கா குமாரதுங்க போன்றவர்களும் இதே கருத்தினை வெளியிட்டுவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் நீதியை தரக்கூடிய பொறுப்புக் கூறல் நடைபெறப்போவதில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், இன அழிப்புக் குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க முடியும்.
அவ்வாறான விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை விவகாரம் தொடர்பான ஒரு சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் மூலமோ நடைபெறவேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.
தீர்மானம் 05
யுத்தத்தின் பின்னரும் தொடரும் கட்டமைப்புசார் இன அழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பன திட்டமிட்டு தொடர்ச்சியாக சிதைக்கப்படுகின்றன.
தமிழ் மக்கள் ஒருதேசமாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இச் சிதைப்பு நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றது.
நிலப்பறிப்பு இதில் முக்கியமானதாகும் 1948இல் இருந்தே இந் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. திட்டமிட்ட விவசாய குடியேற்றம், சட்ட விரோத விவசாய குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், புனித பிரதேச குடியேற்றம், முப்படையினருக்கான குடியேற்றம், தமிழர் பிரதேசங்களை சிங்கள பிரதேசங்களுடன் இணைத்தல், புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் அமைத்தல் என பல்வேறு வகைகளில் இக் காணிபறிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. போரின் பின்னர் அரச காணிகள் மட்டுமல்ல, உறுதிகள் வைத்திருந்த தனியார் காணிகளும் இப்பறிப்புக்கு இலக்காகின. நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிக்கட்டில் அமர்ந்துள்ள அமர்ந்துள்ள இப்புதிய அரசின் ஆட்சியிலும் மேற்போந்த தமிழ்த் தேசம் மீதான திட்டமிட்ட கட்டமைப்புசார் இன அழிப்புச் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களின் பொருளாதாரம் திட்டமிட்டு முடக்கப்படுகின்றது. பெரும்பான்மையின வர்த்தகர்களின் படையெடுப்பு,தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் படையெடுப்பு, நிதி நிறுவனங்களின் படையெடுப்பு, தொழிலாளர் படையெடுப்பு, என்பவற்றின் மூலம், பொருளாதார சிதைப்பு இடம்பெறுகின்றது.
தமிழர் தாயகத்தில் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தபோதும் கூட திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அரச கருமங்கள் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. தமிழ் காலாசரம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவையனைத்தும் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றைத் தடுத்து நிறுத்தி எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்கவும், அரசினாலும், ஆயுதப்டைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் மக்களுடன் இணைந்து தொடர்ந்து ஜனநாயக வழியில் போராடுவோம்.
தீர்மானம் 6
எல்லைகளை மாற்றியமைத்து பிரதேச மட்டத்திலுள்ள நிர்வாக அலகுகளிற்குள் தமிழரை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த போராடுவோம்.
திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கில் பிரதேச மட்டங்களில் தமிழர்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் பிரதேச செயலக எல்லைகளை மாற்றுதல் மற்றும் தமிழர்களை எண்ணிக்கையில் சிறுபான்மையாக்க் கூடிய வகையில் புதிய பிரதேச செயலகங்களையும் அதற்கான நிர்வாக எல்லைகளையும் உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க மக்களுடன் இணைந்து போராடுவோம்.
தீர்மானம் 7
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினரை வெளியேற்ற தொடர்ந்து குரல்கொடுப்போம்
ஸ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இலட்சக்கணக்கில் ஆயுதப் படைகளை நிறுத்தியுள்ளது. இவ் ஆயுதப் படைகள் தமிழ் மக்களின் வளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளிலும், வர்த்தக நடவடிக்கைகளிலும்,ஈடுபடுகின்றது. மக்களின் அன்றாடக் கருமங்களிலும் தொடர்ச்சியாக தலையிடுகின்றது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள ஆயுதப்படைகள் முழுமையாக எமது மண்ணை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும். அதற்காக தொடர்ச்சியாக குரல்கொடுப்போம்.
தீர்மானம் 8
தமிழ்த் தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாக்க போராடுவோம்
யுத்தம் நடந்த காலகட்டங்களில் கடற்படையினரின் தடை உத்தரவு காரணமாக வடக்கு – கிழக்கு மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருந்தனர். யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றும் கூட வடக்கு – கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கப்;பட்டு வருகின்றனர். தென்னிலங்கை மீனவர்கள் வட கிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமின்றிஅப்பகுதி மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் சேதமாக்குவதாலும்,நிரந்தர தங்குமிடங்களை அத்துமீறி அமைப்பதனாலும்; தமிழ் மீனவர்கள் தமது சொந்த மீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படுகின்ற சூழல் உருவாகி வருகின்றது. மேலும் தென்னிலங்கை மீனவர்கள், வட – கிழக்கு கடற் பிரதேசங்களில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கையாள்வதால் தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதரங்களை இழந்தும் வருகின்றார்கள். இதன் காரணமாக ஒட்டு மொத்தமான தமிழ் மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களாலும்,சட்ட விரோத மீன்பிடி முறைகளாலும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;. அன்றாடத் தொழில் செய்து பிழைக்கும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும், தமிழ்த் தேசத்தின் தாங்குதூண்களின் ஒன்றான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அம்மக்களுடன் இணைந்து செயலாற்றுவோம்.
தீர்மானம் 9
மலையக மக்களின் உரிமைகளுக்காக நாம் இணைந்து குரல் கொடுப்போம்.
மலையக தமிழ் மக்கள் எமது உரிமைப் போராட்த்திற்கு பக்கபலமாக இருப்பவர்கள், தொடர்ந்தும் பக்க பலமாக செயற்பட்டு வருகின்றனர். மலையகத் தமிழ் இளைஞர்கள் பலர் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்து உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். சக தேசிய இனம் என்ற வகையில் அவர்களது உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குண்டு.
மலையக மக்கள் தமது அடையாளங்களை பாதுகாக்கவும், தம்மை ஒரு தனியான தேசமாக நிலை நிறுத்தவும், இறைமையை பேணவும், அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர். மலையக மக்களின் இந்தக் கோரிக்கைகளை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம். அதற்காக அவர்களுடன் இணைந்து குரல் கொடுப்போம்.
தீர்மானம் 10
கிராமிய உழைப்பாளர்கள் எதிர்நோக்கும் சமூக வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாமும் இணைந்து குரல் கொடுப்போம்.
கிராமிய உழைப்பாளர்கள் ஒரே நேரத்தில் தேசிய ஒடுக்கு முறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும், வர்க்க ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். இவர்கள் தமிழ்த் தேசிய போராட்த்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கியவர்கள், போராட்டத்தின் சுமைகளை கடைசிவரை சுமந்தவர்கள், ஆயுதப் போராட்டம் அவர்களுக்கும் ஒரு வலிமை நிலையை கொடுத்தது.
அப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அவர்களது வலிமை நிலை குறைந்துள்ளது. சமூகப் புறக்கணிப்பும் முன்னரை விட மேல் நிலைக்கு வந்துள்ளது. நிலப் பிரச்சினை, தொழில் வாய்ப்புப் பிரச்சினை என்பவற்றால் வாழ்வாதார நெருக்கடிகளும் தோன்றியுள்ளன. தமிழ் மக்களில் நிலமற்றவர்களாக இவர்களே அதிகம் உள்ளனர். ஷ
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அவர்கள் அரசியல் ரீதியாக வலிமை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். அவர்களுக்கான நிலங்களை பெற்றுக் கொள்ளவும்,அடிப்படை வாழ்வாதரத்தை பெற்றுக் கொள்ளவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சமத்துவமான நிலையை அடைவதற்கும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
தீர்மானம் 11
முன்னாள் போராளிகளையும் மக்களையும் வறுமையிவலிருந்தும், போர் பாதிப்புக்களிலிருந்தும் மீட்டெடுக்க உழைப்போம்
போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பொது மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழைப்போம். இக்குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.
தீர்மானம் 12
தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், எதிராகவும் போராடுவோம்.
அண்மைக்காலமாக தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. இவை தமிழ் மக்கள் காலம் காலமாக பின்பற்றி வந்த ஒழுக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானவை.
இத்தகைய பாலியல் கொடுமைகளில் இருந்தும், கொலைகளிலிருந்தும் பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும். சட்ட,சமய கல்வி சார் வல்லுனர்களையும் பொது மக்களையும் இணைத்து இவற்றை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
பெண்கள் என்ற காரணத்திற்காக தமிழ் பெண்கள் அனுபவிக்கும் அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும், பாராபட்ச நடவடிக்கைகளுக்கும் எதிராக எமது கட்சி குரல் கொடுக்கும். கட்சியின் மகளிர் அணி பெண்களை விழிப்பூட்டவும் அரசியல் மயப்படுத்தவும் அமைப்பாக்கவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.
தீர்மானம் 13
போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறை கலாசாரத்திற்கு எதிராக போராடுவோம்.
தமிழ்த் தேசத்து இளைஞர்களையும் மாணவர்களைம் சீரழிக்கும் நோக்கில் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டுவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாசாரத்திற்கு எதிராக போராடுவதுடன், அவற்றிற்கு அடிமையாகியுள்ள இளம் சந்ததியை மீட்டெடுக்கவும் செயலாற்றுவோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
05 பங்குனி 2017