விசைப்பலகை, குரல் அல்லது வேறு உள்ளீட்டுக் கருவிகளை பயன்படுத்தாமல், ஒருவர் சிந்திக்கும் வாக்கியங்களை, கணினித்திரையில் வேகமாகக் காட்டும் தொழிற்நுட்பத்தை ‘பிரெயின் கேட்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
உலகெங்கும் இத்தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி செய்யும், பல விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கும் பிரெயின் கேட், இத்தொழில் நுட்பம் பலவிதங்களில் பயன்படும் எனவும், தெரிவித்துள்ளது.மூளைத் தாக்குதல் ஏற்பட்டு, முழுமையாக செயல்பட முடியாதவர்களுக்கு, ‘மூளை- கணிப் பொறி – இடைமுக’ தொழிற்நுட்பம் (Brain-Computer-Interface) உதவுகிறது. நாம் சிந்திக்கும்போது, மூளையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய மின் அலைகளை புரிந்துகொண்டு, அதை கணிப்பொறி மூலம் செயல்படுத்தும் நவீன தொழிற்நுட்பம் இது.
மூளை வெளிப்படுத்தும் நுண் மின் அலைகளை உணரக்கூடிய பல உணர்வான்களை, ஒரு தொப்பியில் வைத்து அணிந்துகொண்டு, கணினித் திரையில் உள்ள, சுட்டியை நகர்த்தும் சோதனை ஏற்கனவே நடந்துள்ளது. ஆனால், இம்முறையில் வேகம், துல்லியம் குறைவாக இருந்தது. எனவே, கிருஷ்ணா ஷெனாய் மற்றும் பிரெயின் கேட் விஞ்ஞானிகள் குழு, சிறு சிலிக்கன் சில்லு ஒன்றை நோயாளியின் மூளையின் மேற்பரப்பில் அறுவைச் சிகிச்சை மூலம் பதித்தனர்.
இந்த சில்லு, மின்னலைகளை துல்லியமாக உணர்ந்து, அந்த சமிக்ஞைகளை கணினிக்கு அனுப்புகிறது. இச்சில்லு பொறுத்தப்பட்டவர், தன் எண்ணங்களின் மூலமே வாக்கியங்களை வேகமாக உருவாக்க முடியும்.“மூளை கணினி இடைமுக தொழிற்நுட்பத்தின் மூலம், விரைவில் ஒருவர் மொபைல்பேசியில் வேகமாக குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்,” என்று ஊடகவியலாளர்களிடம், கிருஷ்ணா ஷெனாய் அண்மையில் தெரிவித்தார்.