அவுஸ்ரேலியாவின் பேட்டிங் பலத்தை அஸ்வின் தகர்த்து எறிவார் என்று 90 ரன்கள் குவித்த லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார். இந்தியா சார்பில் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 90 ரன்கள் சேர்த்தார்.
இந்தியாவை லயன் சுருட்டியதுபோல் அவுஸ்ரேலியாவை அஸ்வின் சுருட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ராகுல் கூறுகையில் ‘‘அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் என்பது எங்களுக்குத் தெரியும். ஒருமுறை அவர் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திவிட்டால், அதே சுறுசுறுப்பில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை மளமளவென வீழ்த்திவிடுவார். இதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்.
ஜடேஜா இன்று அதிக அளவில் ஓவர்கள் வீசவில்லை. இடதுகை பேட்ஸ்மேனுக்கு லயன் பந்து வீசும்போது வலது பக்கத்திற்கு வெளியே ஆடுகளம் கடினமாக இருந்தது. அந்த இடத்தில் தொடர்ந்து ஜடேஜா பந்து வீசினால், நம்மால் விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியும்.
ரஞ்சி டிராபிக்கு தயார் செய்த அதே ஆடுகளம் போன்றுதான் தோன்றுகிறது. 2-வது நாள் கடைசி அல்லது 3-வது நாளில் இருந்துதான் வெடிப்பு ஏற்படும். ஆனால், ஆடுகளம் மிகவும் ட்ரையாக இருக்கிறது. வெடிப்புகளும் காணப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இடது கை பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் இருந்து பந்து வீசி, ஆடுகளத்தை சேதப்படுத்தியது லயன் பந்து பவுன்சுக்கு சாதகமாக இருந்தது’’ என்றார்.