இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
புனே டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்வியால் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் நாளைய டெஸ்டில் இந்திய அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான ஆடுகளமான புனேயில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. முதல் இன்னிங்சில் 105 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 107 ரன்னிலும் சுருண்டது. இரண்டு இன்னிங்சில் சேர்த்து இந்திய வீரர்களால் 74 ஓவர்களே தாக்கு பிடிக்க முடிந்தது பரிதாபமே. இந்த மோசமான நிகழ்வில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி வீராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட்டில் தோற்றது. அதில் இருந்து உத்வேகம் பெற்று கொல்கத்தா, சென்னை டெஸ்டில் வென்று கங்குலி தலைமையிலான அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
கங்குலி வழியை பின்பற்றி வீராட்கோலி அணி எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு காலேயில் நடந்த முதல் டெஸ்டில் கோலி அணி 112 ரன்னில் சுருண்டு 63 ரன்னில் தோற்றது. அதை தொடர்ந்து எஞ்சிய 2 டெஸ்டில் வென்று இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்று முத்திரை பதித்தது.
இதேபோன்று எழுச்சியை பெங்களூர் டெஸ்டில் பெற்று மீண்டு வருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
முதல் டெஸ்ட் தோல்வியால் அணியில் மாற்றம் செய்யப்படும். கூடுதல் பேட்ஸ்மேனாக கருண்நாயர் சேர்க்கப்படலாம். இதே போல புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அவுஸ்ரேலிய அணி பெங்களூர் டெஸ்டிலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கப்டன் சுமித், சுழற்பந்து வீரர் ஒகிபே அந்த அணியின் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.
சுமித் சதம் அடித்து முத்திரை பதித்தார். ஒகிபே இந்திய வீரர்களை தன் மந்திர பந்துவீச்சால் கிறங்கடித்தார். அவர் புனே டெஸ்டில் 12 விக்கெட்டை சாய்த்தார். இதுதவிர வார்னர், மார்ஷ் சகோ தரர்கள், ஸ்டார்க், லயன் போன்ற சிறந்த வீரர்களும் அவுஸ்ரேலிய அணியில் உள்ளனர்.
புனே ஆடுகளம் போல் இல்லாமல் பெங்களூர் பிட்ச் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும்.
நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.