அவுஸ்ரேலிய துரித உணவு துறையில் பணியாற்ற வெளிநாட்டினருக்கு விசா கிடைப்பது கடினம்

துரித உணவு சேவை துறையில் உள்ள பணியிடங்களில் அமர்த்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அளித்து வந்த விசா சலுகையை பெருமளவில் அவுஸ்ரேலிய நிறுத்தப் போவதாக, அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அவுஸ்ரேலியா குடியேற்றத்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் இது குறித்து கூறுகையில், அவுஸ்ரேலிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதுகாத்திடும் வகையில் இந்த முடிவு வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து, மெக்டொனால்ட்ஸ், கேஃஎப்சி மற்றும் ஹங்கிரி ஜேக்ஸ் போன்ற துரித உணவகங்களில் பணிபுரிய 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு, 457 என்றழைக்கப்படும் பணி விசா வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்பு பற்றாக்குறையை சமாளிக்க திறமையான பணியாளர் விசா அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றத்துக்கு பீட்டர் டட்டன் விளக்கம் தருகையில், ”அவுஸ்ரேலிய பணியாளர்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஆனால், விதிவிலக்கான சூழல்களில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு இன்னமும் விசா வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.