அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்தப்போட்டி நடந்த புனே ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் நடைபெறும் பெங்களூர் ‘பிட்ச்‘ எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. முதல் 3 நாளில் பேட்டிங்கும், பின்னர் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும்.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் 1974-ம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான இந்த டெஸ்டில் இந்தியா 267 ரன்னில் தோற்றது.இங்கு 21 டெஸ்ட் நடைபெற்று உள்ளது. இதில் இந்தியா 6 டெஸ்டில் வெற்றி பெற்றது . 6-ல் தோற்றது. 9 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
அவுஸ்ரேலியாவுடன் இந்த மைதானத்தில் இந்தியா 5 முறை மோதியுள்ளன. இதில் 2010-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் மட்டுமே 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 2004-ம் ஆண்டு 217 ரன் வித்தியாசத்திலும், 1998-ம் ஆண்டு 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது. 1979 மற்றும் 2008-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
பொதுவாக இந்திய ஆடுகளங்களில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். புனேயில் நடந்த முதல் டெஸ்ட் முற்றிலும் மாற்றமாக அமைந்தது. பெங்களூர் ‘பிட்ச்’ இந்திய அணிக்கு ‘கை’ கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கடைசியாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்த மைதானத்தில் இந்தியா அதிகபட்சமாக 626 ரன் குவித்து இருந்தது. 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்த ரன் எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 495 ரன் (2010-ம் ஆண்டு) குவித்து இருந்தது. அவுஸ்ரேலிய அணி இந்த ஆடுகளத்தில் அதிகபட்சமாக 478 ரன் எடுத்து இருந்தது.
பாகிஸ்தான் 116 ரன்னில் சுருண்டதே (1987) இங்கு குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய அணி குறைந்தபட்சமாக 118 ரன்னும், அவுஸ்ரேலியா 223 ரன்னும் இந்த மைதானத்தில் எடுத்து இருந்தன.
தெண்டுல்கர் 9 டெஸ்டில் 869 ரன் எடுத்துள்ளார். சராசரி 62.07 ஆகும். இரண்டு சதம் அடங்கும். அதிகபட்சமாக 214 ரன் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கங்குலி 600 ரன் எடுத்து உள்ளார். ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான். அவர் 2005-ம் ஆண்டு 267 ரன் குவித்தார். கங்குலி 239 ரன் குவித்து 2-வது நிலையில் உள்ளார்.
கும்ப்ளே அதிகபட்சமாக 41 விக்கெட் (9 டெஸ்ட்) எடுத்துள்ளார். ஹர்பஜன்சிங் 30 விக்கெட் எடுத்து அடுத்த இடத்தில் இருக்கிறார். மன்ந்தர்சிங் 27 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதே ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
Eelamurasu Australia Online News Portal