அவுஸ்ரேலியா சுழற்பந்தில் ஜொலிக்க காரணம் ஒரு தமிழர்!

மலேசியாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டில் அந்த நாடு பிரபலமும் இல்லை. ஆனால், அந்த நாட்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த வீரர் ஒருவர் பிறந்து வளர்ந்திருக்கிறார்.

புனேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது. அவுஸ்ரேலிய ஸ்பின்னர் ஸ்டீவ் ஓ கீஃப் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர், விட்டுக் கொடுத்தது 35 ரன்கள் மட்டுமே. ஒரே டெஸ்டில் பெயர் வாங்கி விட்டார்.

அவுஸ்ரேலிய விமானப்படையில் ஸ்டீவின் தந்தைக்கு பணி. மலேசியாவில் போஸ்டிங். அந்த சமயத்தில்தான் ஸ்டீவ் பிறந்திருக்கிறார். அதனால், கிரிக்கெட் போட்டியில் மலேசியாவின் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. பின் அவுஸ்ரேலியாவுக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. உள்ளூர் போட்டிகளில் சாதித்து மெள்ள மெள்ள தேர்வாளர்களின் கவனம் ஈர்த்து, இதோ அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்து விட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்ரேலிய ‛ஏ’ அணியில் இடம்பெற்றிருந்தார் ஓ கீீஃப். இந்தியா, தென் ஆப்ரிக்கா, அவுஸ்ரேலிய ‛ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் நான்குநாள் போட்டி சென்னையில் நடந்தது.

அந்தத் தொடரில் ஓ கீஃப், முத்திரை பதித்திருந்தார். அப்போதிருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்தார் ஒரு தமிழர். அவருக்கு மட்டுமல்ல, துணைக் கண்ட ஆடுகளங்களில் சுழற்பந்தை எதிர்கொள்வது, சுழற்பந்தில் எதிரணியைத் திணறடிப்பது போன்றவற்றுக்காக, சுழற்பந்து நுணுக்கங்கள் தெரிந்த இந்தியர் ஒருவரை ஸ்பெஷலாக அப்பாயின்ட் செய்திருந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். அவர் பெயர் ஸ்ரீதரன் ஸ்ரீராம். அவுஸ்ரேலியஅணி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம், அவர் அந்த அணியுடன் பயணித்து வருகிறார்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம், முன்னாள் இந்திய வீரர். கடந்த 2000ம் ஆண்டில் இந்தியாவுக்காக விளையாடியவர். ஸ்பின்னர். ஆல் ரவுண்டர். தோனியின் முதல் போட்டி இவரது கடைசிப் போட்டியானது துரதிர்ஷ்டம். அவரது 4 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்வு அவ்வளவு பிரகாசமாக இல்லை.

அணியில் நிரந்தர இடம் இல்லை. தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகவே, சர்வதேச கிரிக்கெட்டில் 9 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கில் அவர் அடித்தது 81 ரன்கள். அதற்குபின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போய் விட்டார்.

ஆனால், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்தார். ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு மட்டுமல்லாது மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் துணை பயிற்சியாளராக பணியாற்றினார்.

பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஸ்ரீதரன் தற்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். கிரிக்கெட் குறித்த அவரது அபார அறிவு அவரைக் கைவிடவில்லை. ஓ கீஃப் படைத்துள்ள சாதனை ஸ்ரீதரனைப் பற்றி மீண்டும் பேச வைத்திருக்கிறது.

சர்வதேச அளவில் ஸ்ரீதரனுக்கு ஓகீஃப் வழியாக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓ கீஃப் சாதனை குறித்து, ஸ்ரீதரன் கூறுகையில், ”ஓ கீஃப் கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தார். பந்தை கரெக்டான ஸ்பீடில், லென்த்தாக வீச சொல்லிக் கொடுத்தேன்.

எப்படி பந்தை வீச வேண்டுமென தீர்மானித்து, அவரது திட்டப்படியே பந்து வீச சொன்னேன். அவ்வளவே. அது கிளிக் ஆகி விட்டது’’ என அடக்கி வாசிக்கிறார். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தனக்குக் கொடுத்த சுதந்திரத்தைப் பாராட்டவும் தவறவில்லை. ‛‛ஸ்பின் குறித்து மட்டுமல்ல, எல்லா விஷயங்களைப் பற்றியும் தயக்கமின்றி பேச, தலைமை பயிற்சியாளர் லெஹ்மன் எனக்கு சுதந்திரம் அளித்துள்ளார். இது நன்றாகவே பயனளிக்கிறது” என்கிறார்.

ஏற்கெனவே புனே பிட்ச்சில் ஸ்ரீதரன் விளையாடியுள்ளார். இந்தியாவின் அநேக மைதானங்களில்விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்த அனுபவ அறிவைத்தான் தற்போது ஆஸ்திரேலிய அணி பயன்படுத்திக் கொள்கிறது. ஸ்பின்னுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் ஸ்பின்னர்களை வைத்தே நம்மை அடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஸ்ரீதரனின் நண்பரும் கிரிக்கெட்டருமான பிரசன்னா கூறுகையில், ”வெளிநாட்டு டிரெஸ்சிங் ரூமுக்கு ஏற்றுமதியாகியுள்ள மற்றொரு இந்திய கோச் ஸ்ரீதரன். ஊக்கமளிக்கும் வகையில் எல்லாம் அவருக்கு பேசத் தெரியாது. பந்துவீச்சளாரின் விருப்பத்துக்கு ஏற்பவும் மனநிலைக்கு ஏற்பவும் பந்துவீசச் சொல்வார். ஓ கீஃபிடம் இதே டெக்னிக்கைத்தான் கையாண்டு ஸ்ரீதரன் வெற்றி கண்டுள்ளார்” என்கிறார்.

o_keef_12360