முற்றிலும் அழிந்துவிட்ட, மாமத் விலங்கினத்தை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்காவிலுள்ள, ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். யானை இனத்தைச் சேர்ந்த மாமத், பனிப் படர்ந்த பகுதிகளில் மட்டுமே வாழ்ந்தது.
கடுங்குளிரை சமாளிக்க, இதன் உடலெங்கும் சடைபோல முடி போர்த்தியிருக்கும். ரஷ்யாவின் சைபீரிய கரையிலிருந்து, 87 மைல்கள் தொலைவில், கிழக்கு சைபீரியக் கடலில் உள்ள, ராங்கல் தீவில், 6,000 வருடத்திற்கு முன் வரை உயிர் வாழ்ந்த, மாமத் இனம் அழிந்துவிட்டது.
பனிப் படிமங்களிலிருந்து கிடைத்த மாமத்தின் மரபணுக்கூறுகளை எடுத்து, இன்றுள்ள ஆசிய யானையின் மரபணுவை வைத்து கருவுறச் செய்ய ஹார்வர்டு விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
மரபணுவின் நுட்பமான கூறுகளில், திருத்தங்களை செய்ய உதவும், ‘கிரிஸ்பர்’ என்ற மரபணு பொறியியல் தொழிற்நுட்பம் மூலம், இன்று விரைவாகவும் அதிக செலவின்றியும் செய்ய முடியும். இதுவரை மாமத்தின் மரபணுவில், 45 திருத்தங்களை ஹார்வர்டு விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
இந்த முறையில் பிறக்கும் யானைக் கன்றுக்கு அடர்ந்த முடி முதல், குளிர் பிரதேசத்திற்கு தேவையான கொழுப்பு வரை, மாமத் போலவே அனைத்து பரம்பரை அம்சங்களும் வருவதற்கு சில ஆயிரம் திருத்தங்கள் செய்யவேண்டி உள்ளதாக ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த மரபணுவியல் பேராசிரியர், ஜார்ஜ் சர்ச் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஆனால், ஆய்வுக்கூடத்திலேயே செயற்கை கருவறையை உருவாக்கி, அழிந்த மாமத்தை உயிர்பெறச் செய்ய, இன்னும் தொழிற்நுட்பம் வளர வேண்டியிருப்பதாக, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது, 2030 வாக்கில் சாத்தியமாகலாம் என, அவர்கள் கணித்துள்ளனர்.