அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்பான, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ 2018ன் இறுதியில், இரண்டு பயணிகளை பூமியிலிருந்து அழைத்துச் சென்று, நிலாவைச் சுற்றிக் காட்டிவிட்டு, திரும்பி அழைத்துவர திட்டமிட்டுள்ளது.
மனிதகுலத்தின், முதல் நிலா சுற்றுலாவுக்கு செல்லவிருக்கும் அந்த, இரு பயணிகளும் அதற்கான கட்டணத்தை செலுத்தியிருப்பதாக, ஸ்பேஸ் எக்சின் உரிமையாளர், எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த இரு பயணிகளும், இப்போது தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என, கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விண்வெளி அமைப்பை சேராத, தனிநபர்கள் விண்வெளிச் சுற்றுலா செல்வது புதிதல்ல. ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான ஐ.எஸ்.எஸ்.,க்கு, 7 தனிநபர்கள் கட்டணம் செலுத்தி ரஷ்யாவின், சோயுஸ் விண்கலன் மூலம் சென்று தங்கி, பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், தனிநபர்கள் சந்திர கிரகத்திற்கு அருகே, சுற்றுலாச் செல்ல முன்வந்திருப்பது இதுவே முதல் முறை.
இந்த பயணத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ், தனது ‘பால்கன்’ மறுபயன் ராக்கெட்டுகளையும், ‘டிராகன் ஹெவி’ என்ற விண்கலனையும் பயன்படுத்த உள்ளது. அமெரிக்க அரசு அமைப்பான ‘நாசா’ விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் எஸ்.எல்.எஸ்., என்ற விண்கலனை, 2019ல் அனுப்பி சோதிக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ், 2018ல் திட்டமிட்டபடியே பயணத்தை மேற்கொண்டால், வேற்று கிரக சுற்றுலாவுக்கு அடிபோட்ட முதல் அமைப்பு என்ற பெருமையைத் தட்டிச் செல்லும்.