ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்கள்!

ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இந்தியாவின் அசுர சாதனையை கண்டு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உளவுப்படை அதிர்ச்சியில் வாய் பிளந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆசியா கண்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.

2008-ல் சந்திரமண்டலத்தில் கால்பதித்தது, ஆசிய நாடுகளில் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா, 2013-ல் செவ்வாய் கிரகத்திற்கு ‘மங்கல்யான்’ என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது.

அடுத்தடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி  உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

இந்த புகழ் வரலாற்றின் புதிய அத்தியாயமாக கடந்த 15-ம் தேதி ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியதன் வாயிலாக இந்திய விண்வெளித்துறை ஆய்வு மையமான இஸ்ரோ அசுரத்தனமான உலக சாதனை படைத்தது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் நமது சாதனையை ஆச்சரியமாகவும், பொறாமை கண்ணோட்டத்துடனும் மூக்கில் விரலை வைத்தபடி பார்த்த அதே வேளையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவும் இந்தியாவின் அதிரடியான இந்த சாதனையை கண்டு வியந்து, மலைத்துப் போன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சாதனையை கண்ட பின்னர் இந்தியாவை விட பின்தங்கி இருக்க கூடாது எனவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் திகைப்பை அந்நாட்டு உளவுத்துறையின் புதிய தலைவராக டொனால்ட் டிரம்ப்பால் அறிவிக்கப்பட்டுள்ள டான் கோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும்கட்சி எம்.பி.யாகவும் பதவி வகித்துவரும் டான் கோட்ஸ் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது, ‘ஒரே நேரத்தில், ஒரே ராக்கெட் மூலம் 104 ஏவுகணைகளை இந்தியா விண்வெளியில் செலுத்தியது என்ற தகவலை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவை அளவில் சிறியதாக இருக்கக் கூடும். ஆனால், இதை பார்த்த பின்னரும் நாம் பின்தங்கி இருக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.


இதை கேள்விப்படும்போது, ‘வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி’ பட்டம் என்பதுபோல் ‘இந்தியன்டா’ என்று நாம் ஒவ்வொருவரும் சட்டை காலரை தூக்கி விட்டபடி, மார்தட்ட தோன்றுகிறதல்லவா..,?