யாரையும் மரியாதைக் குறைவாக பேசவேண்டாம் என்று தனது இயக்கத்தாருக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கமல் தனது பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாணவர்களுக்கு உறுதுணையாக கருத்துகளை கூறியிருந்த கமல், அடுத்ததாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமாகவும் தனது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கமல் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதாக இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.
அந்த அறிக்கையில், தொடர்ந்து தமிழகத்திற்கு ஏற்பட்டு வரும் அவமானங்களையும், தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளையும், யார் பக்கம் தவறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியும் வெளியாகியிருந்தது. மேலும், நெடுவாசலில் மக்கள் நடத்தும் போராட்டம் போர் என்றும், அந்த போராட்டத்தில் போலீஸ்காரர்கள் அடிக்க வருகிறார்கள் என்றால் திருப்பி அடி என்றும், தானும் இந்த போரில் கலந்துகொள்ள வருகிறேன் என்றும் கமல் கூறியிருந்ததாக கூறப்பட்டது. லைவ் டே தமிழ்நாடு என்ற இணையதளம் அதை தனது வலைத்தளத்தில் பதிவும் செய்திருந்தது.
இதுகுறித்து கமல் தற்போது விளக்கம் அளித்துள்ளார். லைவ் டே தமிழ்நாடு தளத்தில் என் பெயரால் எழுப்பப்படும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல. போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது. லைவ் டே தமிழ்நாடு இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவரது இயக்கத்தாருக்கு அறிவுரை ஒன்றையும் கூறியுள்ளார். அதாவது, யாரையும் மரியாதைக் குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை என்று கூறியுள்ளார்.