இடுப்பு உயர ரோபோ ‘கேஸி!’

ரோபோவியலாளர்கள், ஆளைப் போலவே, ரோபோ, ஆளுயர ரோபோ என, படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபாடிக்ஸ் நிறுவனம், இடுப்பு உயர ரோபோவை, அதுவும், இடுப்பு வரை மட்டுமே உள்ள ரோபோவை உருவாக்கி ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கேஸி’ என்ற இந்த ரோபோ, இரு கால்களும், சுற்றிலுள்ளவற்றை பார்க்கும், கேமரா கண்கள் மற்றும் பலவித உணர்வான்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது.

கடை கண்ணிக்குப் போய் வருபவர்கள், இதை உடன் அழைத்துச் சென்றால், திரும்பி வரும் போது, சாமான்களை சுமந்து வரும் திறன் கொண்டது.

கூட யாரும்வராவிட்டாலும், இதையே கடைகளுக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி வரச் சொல்லவும் முடியும். ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ரோபோ விஞ்ஞானிகள் முன் உருவாக்கிய, ‘அட்ரியாஸ்’ என்ற ரோபோவை அடிப்படையாக வைத்து, அதிலுள்ள குறைகளை போக்கி, கேஸி உருவாக்கப்பட்டிருப்பதாக, அஜிலிட்டி ரோபாட்டிக்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், கேஸியை நேரடியாக நுகர்வோருக்கு விற்காமல், பிற ரோபோ தயாரிப்பாளர்களுக்கு விற்கவே, அஜிலிட்டி விரும்புகிறது.

அதாவது, பிற ரோபோ கம்பெனிகள், கேஸியை அடிப்படையாக வைத்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கூடுதல் திறன்கள், வசதிகளை சேர்த்து விற்பனை செய்யலாம். மனிதர்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய, தேவையான அதே அளவு சக்தியை, தெம்பை மட்டுமே செலவிடும் வகையில், கேஸி உருவாக்கப்பட்டிருப்பதாக, அஜிலிட்டி விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.