அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பான புதிய உத்தரவினால் இரட்டைக்குடியுரிமை உடைய அவுஸ்ரேலியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு கொண்டிருப்பவர்கள் குறித்து வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவர் எனக்கு தொலைபேசி மூலம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
பிறந்த இடமோ அல்லது இரட்டை குடியுரிமை உடையவர்களாக இருந்தாலோ அல்லது வேறு ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை வைத்திருந்தாலோ அவற்றினை பொருட்படுத்தாமல் அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போன்று அமெரிக்கா செல்ல முடியும் என்று வெள்ளை மாளிகை உத்தரவாதம் வழங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் அகிய நாடுகளிலிருந்து அகதிகள் அல்லது குடியேற்றவாசிகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த உத்தரவு சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.