சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே, அதிக செலவில்லாமல், கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.
அமெரிக்காவிலுள்ள, பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே, அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர்.தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும், பாலிஸ்டைரின் கட்டை மீது, கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி, அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கட்டையின் மேலிருக்கும் கார்பன் காகிதம், கீழிருந்து நீரை உறிஞ்சுகிறது. அதன் கரிய நிறத்தில், சூரிய வெப்பம் படும் போது, காகிதத்தில் உள்ள நீர் சூடாகி, ஆவியாகி மேலே வருகிறது. இதை ஒரு கண்ணாடி கூண்டு தடுத்து குளிர்விக்க, சுத்தமான நீர் கிடைக்கிறது.
ஆவியாகும் நீரில் கிருமிகள், கசடுகள் எதுவும் இருக்காது.ஒரு சதுர அடிக்கு, இந்த சாதனத்திற்கு ஆகும் செலவு, வெறும், 132 ரூபாய் மட்டுமே.
இதை, பலமுறை பயன்படுத்தலாம். வறட்சியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கியவர்களுக்கும், இந்த சூரிய வெப்ப நீர் வடிகட்டி உதவும் என, இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.