அவுஸ்ரேலியா நிதான ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய புவனேஸ்வர் குமார் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இடத்தில் புதுமுக வீரர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரகானே, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

அவுஸ்ரேலியா- ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், மேட்ரென்ஷா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ் கோம், மிச்சேல் மார்ஷ், மேத்யூ ஹடே, ஸ்டீவ் ஒசிபி, நாதன் லயன், ஸ்டர்கி, ஹாசல்வுட்.

இந்தியா 3 சுழற்பந்து வீரர்களுடனும் (அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ்), அவுஸ்ரேலியா 2 சுழற்பந்து வீரர்களுடனும் (லயன், ஒசிபி) களம் இறங்கியது.

இந்தியா 2 வேகப்பந்து வீரர்களுடனும், ஆஸ்திரேலியா 3 வேகப்பந்து வீரர்களுடனும் களம் கண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், ரென்ஷாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.


இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே ரென்ஷா பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். 82 ரன்கள் சேர்த்த நிலையில் துவக்க ஜோடி பிரிந்தது. உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 77 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ரென்ஷா 36 ரன்கள் சேர்த்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஓய்வு பெற்றார். பின்னர் ஸ்மித்-மார்ஷ் ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது.