நில மீட்புக்காக போராடும் சிறார்கள்! பத்மினி சிதம்பரநாதன்

நில மீட்புக்காக போராடும் சிறார்கள் தாம்படும் அவலங்களை பாடல்களாக கோஷங்களாக கூறி அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன்.

கேப்பாப்பிலவு நில மீட்புக்காக சிறார்கள் கூட தாங்கள் படுகின்ற அவலங்களை மிகத் தெளிவாக பாடல்களாகவும் கோஷங்களாகவும் கூறி தங்கள் நிலங்களை விடுவிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எந்த ஒரு போராட்டத்திலும் சிறார்கள் தங்கள் அவலங்களை வெளிப்படுத்தியதில்லை.

மக்களின் மனிதாபிமான பிரச்சினையை உணர்ந்து சிறுவர்களின் உணர்வை மதித்து அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன். கேப்பாப்பிலவு நில மீட்புக்கான போராட்டக் களத்தில் பங்குகொண்டு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெயிலோ பனியோ புழுதியோ என்றும் பாராமல் பிள்ளைகளும் கல்வியையும் விட்டு சிறுவர்களும் நிறைய பெண்களும் துன்பங்களை அனுபவித்தபடி தொடர்ந்தும் 20 நாட்களுக்கும் மேலாக இப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறு சூரிபுரம் விடுவிக்கப்பட்டதோ அவ்வாறு பிலக்குடியிருப்பும் விடுவிக்கப்பட்டு அந்த மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கவேண்டும். இதில் அனைத்துத் தரப்பும் பங்கு கொள்ளவேண்டும். தென்னிலங்கையில் இருந்தும் பல அமைப்புக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஊரின் பிரச்சினையை புரிந்து கொண்டு இது அவர்களுடைய நிலம் அவர்களுக்கே சொந்தம் என்பதை புரிந்துகொண்டு அந்த நிலங்கள் விடுவிக்கப்படல் வேண்டும். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைத்து நல்ல முடிவை எட்டுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அவர்களின் காணிகளுக்கு போகவிடாமல் தடுத்து வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. பனியிலும் வெயிலிலும் கொட்டும் புழுதியிலும் பெண்களும் சிறார்களும் போராடி வருகின்றனர்.

நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற இந்த அரசு வாக்குறுதிகளை வழங்குவதும் அதனை செயற்படுத்தாமல் விடுவதையும் நாம் தொடரந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

எங்கட பூர்வீகமான நிலம் விடும்வரை எங்கட நிலங்களுக்கு சென்று கொட்டில் போடும் வரை எங்கட போராட்டம் தொடரும். நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற அரசிடம் இருந்து நாம் எமது சிறிய விடயங்களை கூட பெற முடியாது போனால் எவ்வாறு தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எதிர்ப்பார்ப்பது ? என கேப்பாப்பிலவில் உள்ள மக்கள் கேட்கின்றனர். ஆதங்கப்படுகின்றனர்.

கேப்பாப்பிலவிலுள்ள 84 குடும்பங்களில் 30 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக உள்ளனர். அவர்கள் கடற்றொழில் மூலமே தமது வாழ்வாதாரத்தை நிறைவு செய்கின்றனர். போராட்டம் தொடங்கி அங்குள்ள ஒட்டுமொத்த மக்களும் நாளாந்த உழைப்பில் வாழ்பவர்களும் 20 நாட்களாக தொழிலின்றி இப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுகின்றனர்.

அவர்களின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்போதிலும் இப் பேராட்டத்தில் சிறிதேனும் தளராது அனைத்துப் பெண்களும் மிக உறுதியாக உள்ளனர். மிக விரைவில் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் நாடு பூராக கொண்டாடப்பட ஆயத்தமாகியிருக்கின்ற வேளையில் இங்குள்ள பெண்கள் தமது சொந்த நிலத்தைக் கோரி கணி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர்.

இத்தகைய பெண்களின் ஏக்கத்தின் மத்தியிலா பெண்கள்தினம் கொண்டாடப்பட இருக்கின்றது?இத்தகைய மனிதாபிமான பிரச்சினைகள் சீர்தூக்கி பார்க்கப்பட்டு அவர்களுக்கான தீர்வு விரைவில் எட்டப்படவேண்டும். கேப்பாப்பிலவு மட்டுமன்றி விடுவிக்கப்படாத எம் மக்களின் நிலங்கள் யாவும் விடுவிக்கப்படவேண்டும் என்றார்.