இந்தியா-அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம் டிரா ஆனது

ஷ்ரேயாஸ் ஐயரின் இரட்டை சதத்தால் இந்தியா, அவுஸ்ரேலியா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், வடே 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று தொடர்ந்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். மிட்செல் மார்ஷ் 75 ரன்னிலும், வடே 64 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹெர்வாத்கர், பன்சால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெர்வாத்கர் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். பன்சால் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அய்யர் அதிரடியாக விளையாடினார். அவருக்குப்பின் வந்த பாவ்னே 25 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 19 ரன்னிலும் வெளியேறினார்கள். ஆனால் அய்யர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அய்யர் 85 ரன்னுடனும், ரிஷப் பந்த் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 3-வது நாளான இன்று அய்யர், ரிஷப் பந்த் இருவரும் தொடர்ந்து விளையாடினர். ரிஷப் பந்த் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, இஷான் கிஷன் 4 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் அய்யரும்,  கௌதமும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய அய்யர் சதம் விளாசினார்.
இந்த ஜோடி, 7-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தனர். கௌதம் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதம் அடித்தார். ஒரு முனையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 403 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அய்யர் 202 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து 56 ரன்கள் முன்னிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 36 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்தியா அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.