ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர்.
மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார்ஜன்ட் ஹேமச்சந்திர பெரேரா ஆகிய மூன்று அதிகாரிகளிடமும், இரவிரவாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர், நேற்றுக்காலை கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு ஒன்றே இவர்களைக் கைது செய்துள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்ட மூன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் நேற்று கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதிவான் பெர்னான்டோவின் இல்லத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது, தெகிவளையில் உள்ள வதிவிடத்துக்கு அருகில் வைத்து கீத் நொயாரைக் கடத்திய சந்தேக நபர்கள், தொம்பேயில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு சென்று சித்திரவதை செய்துள்ளனர் என்று, சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் நிசாந்த சில்வா, மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.
“தனது நாளிதழில் வெளியிட்ட தகவல்களை வழங்கியவர்கள் யார் என்று அவர்கள் கீத் நொயாரிடம் இருந்து அறிந்து கொள்ள முயன்றனர். அவரை கொல்லவதற்கும் சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அவரை தூக்கிச் சென்று வதிவிடத்துக்கு அருகே வீசிவிட்டுச் சென்றனர்” என்றும் ஆய்வாளர் நிசாந்த சில்வா, குறிப்பிட்டார்.
அதேவேளை, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சார்பில் முன்னிலையான சட்டவாளர், நொயர் சாட்சியமளிப்பதற்கு நாட்டில் இல்லை என்றும், தமது கட்சிக்காரர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும் மார்ச் 3ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்களை வரும் 23ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் முன்னைய ஆட்சிக்காலத்தில் மருதானையில் இயங்கிய திரிபொலி சந்தை என்ற முகாமில் இருந்து செயற்பட்ட இரகசிய இராணுவப் புலனாய்வு பிளட்டூனைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, மேலும் மூன்று சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில், ஏனைய தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மேஜர் ஒருவர் உள்ளிட்ட மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில், காவல்துறை கோரும் உதவிகளை சிறிலங்கா இராணுவம் வழங்கும் என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.