இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி ஸ்மித் சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா அணி இந்தியா வந்துள்ளது.
முதல் டெஸ்ட் வருகிற 23-ந்திகதி புனேயில் நடக்கிறது. இதற்கு முன்பாக அவுஸ்ரேலியா இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
அவுஸ்ரேலிய அணியின் வார்னர், ரென்ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். வார்னர் 25 ரன்னிலும், ரென்ஷா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதன்பின் வந்த ஸ்மித் (107), ஷேன் மார்ஷ் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். சதம் அடித்த இருவரும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினர்.
அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 45 ரன்கள் அடித்தார். இந்த மூவரின் சிறப்பான ஆட்டத்தால் அவுஸ்ரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது.
மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் வடே 78 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ அணியின் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.