`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார்.
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.
ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றால்’. பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.
இந்த படம் சாதரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும்.
குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.
தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றால்’.