உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்ரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்ரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை பிரதமர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமாக அமைந்துள்ளது.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 19 மரியாதை வேட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.