விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் ரணில் சந்திப்பு

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள்.

இதேவேளை  டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம். கல்வி என்பனவற்றை மேம்படுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் பிரதமர் ரணில் விக்மரசிங்க மேற்கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் நீண்டகாலம் ஆற்றிய சேவைகள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜோ ஹொலன்டர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் புகழை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்க மகத்தான பணிகளை நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார்.

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புகளும் சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதி ரீதியான ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டமை பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், பின்னடையும் சகல சந்தர்ப்பங்களிலும் முன்னோக்கிச் செல்வதற்கான வல்லமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் மாற்றத்திற்கமைவாக எதிர்கால பயணப்பாதையில் மாறுவது அவசியமாகும். வாழ்வில் வெற்றி பெற தோல்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். வெற்றிகளின்போதும் தோல்விகளுக்கு முகம் கொடுக்கும்போதும் சளைக்கக்கூடாதென தெரிவித்தார்.