தங்களது லக்கேஜை விமான நிலையத்தில் இருந்து தூக்கி வந்த அவுஸ்ரேலிய வீரர்கள்

அவுஸ்ரேலிய வீரர்கள் தங்களது லக்கேஜ்களை மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர்களே தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

இந்தியா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அவுஸ்ரேலிய அணி துபாயில் இருந்து நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது.

அவர்கள் தங்களது விளையாட்டு பொருட்கள் அடங்கிய கிட்ஸ் மற்றும் பெரிய பேக்குகள் கொண்டு வந்திருந்தனர். அதை அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு எடுத்துச் செல்லும் வண்டியில் ஏற்றுவதற்கு போர்ட்டர்கள் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அவுஸ்ரேலியஅணியின் கப்டன் ஸ்மித், வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் லக்கேஜை அவர்களே எடுத்துச் சென்றனர்.

லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்காததால் பி.சி.சி.ஐ. நிர்வாகம் முடங்கியுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது நிதி ஒதுக்கீடு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. ஆனால் அவுஸ்ரேலிய தொடருக்கான நிதியை ஒதுக்கியதாக தெரியவில்லை. இதனால் பி.சி.சி.ஐ. போர்ட்டர்களை ஏற்பாடு செய்திருக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

19 வயதிற்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய U-19 இந்திய அணிக்கு அலவன்ஸ் ஒதுக்காததால் அவர்கள் பணத்திலேயே சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.