கால அவகாசம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றும் நாடகமே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை அரசிற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேலும் இரண்டுவருட கால அவசாகம் வழங்கப்படவேண்டுமா என்பதில் தமிழ் மக்கள் தெளிவுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே இவ்வாறு இலங்கை அரசிற்கு போதுமாக அளவு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகம் மேலும் கால அவகாசம் வழங்க முற்படுவதானது இலங்கை அரசாங்கம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காகவே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு விடையத்தைச் சுட்டிக்காட்டியது. உரிய நேரத்தில் உறுதியான நிலைப்பாடுகளை நிறைவேற்றப்படாவிட்டால் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர்களுடைய பொறுப்புக்கூறல் நடுத்தெருவில் விடப்படும் என கூறியிருந்தோம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கு இணைங்கியமையால்தான் ஒரு சில வெளிநாட்டு ஆதரவோடு அதனைச் செயற்படுத்த அரசு இணங்கிக்கொண்டது. இலங்கை அரசுதான் விசாரணை நடத்தவேண்டும் என நீங்கள் பொறுப்பைக் கொடுத்தபின் அரசுதான் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது. இறுதி முடிவு அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றார்.

கிழக்கு எழுக தமிழ் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது பதிலளித்த அவர்,
கிழக்கு எழுக தமிழிற்காக கிழக்கில் கிராமம் கிராமமாக பயணித்தோம். கிழக்கு மக்களிடையே எந்தவொரு பிரதேசவாதமும் இருந்திருக்கவில்லை. சென்ற இடமெல்லாம் அவர்கள் எங்களை வரவேற்றனர்.

எழுக தமிழின் நோக்கத்தைப் புரிந்து முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.
இதே போன்று முஸ்லீம் மக்களிடம் நாம் ஆதரவு கோரிச் சென்ற போது அங்கும் எந்தவித எதிர்ப்பும் இருந்திருக்கவில்லை. அவர்களால் எம்மை திருப்பியிருக்கமுடியும். ஆனால் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு செய்யவில்லை.
இதேவேளை கிழக்கு எழுக தமிழிற்கு எதிராகச் செயற்பட்டவர்கள் தற்போதைய அரசும் அதற்கு முண்டுகொடுக்கும் கூட்டமைப்பினை சேர்ந்த தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த ஒரு சிலருமேயெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.