அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுவதாகத் தெரிவித்துள்ள அனந்தி சசிதரன் ஒருவரை அடிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மோசமாக எழுதாதீர்கள் என்றும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக தான் எக் கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்ற அனந்தி சசிதரனுக்கு மேடையில் பேச இடம் தரவில்லை என அவர் கண்டனம் வெளியிட்டதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வைத்து சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துவதாகவும் அனந்தி கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அச் செய்தி தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (13) விளக்கமளித்து உரையாற்றும்போதே அனந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து சென்று நான் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் பெண்களிற்கான உரிய அங்கீகாரம் இல்லை என்பது நிச்சயமாக எல்லோருக்கும் தெரியும். தமிழ் மக்கள் பேரவையில் உள்ள ஒரே பெண் உறுப்பினருக்கு பேச சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும் என நான் நம்பினேன். அவருக்கு அச் சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலையில் அது தொடர்பில் நான் கூறியிருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த ஊடகத்திற்கும் நான் அறிக்கை கொடுத்ததும் இல்லை அவர்களிற்கு பேட்டி வழங்கியிருக்கவும் இல்லை. ஒரு இயக்கமாக வளர்ந்துவருகின்ற தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல பெண்களிற்கான அங்கீகாரத்தை வழகவில்லை என்றே நான் கூறியிருந்தேன்.
அறுபது வீதமான பெண்கள் உள்ள நாட்டில் சாதி மத பேதமின்றி அடிமட்டத்திலிருந்து இவ் அமைப்பு பேரியக்கமாகக் கட்டிஎழுப்பப்படவேண்டும் என்றால் அதற்கு பெண்கள் பிரதிநிதித்துவத்தின் பங்களிப்பினை இவர்கள் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது.
ஆனால் எந்த ஒரு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியிலும் நான் அதைக் கூறியிருக்கவில்லை. பொதுவாக பெண்களிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் எனக் கூறிய எனது கருத்தைத் திரிவுபடுத்தி மிக மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்றார் அவர்.