கோப்பி பானம் ஆற்றி தரும் ரோபோ!

ஸ்டார்பக்ஸ் போன்ற பிரபல காபி ஷாப்களில், வாடிக்கையாளர்கள் க்யூவில் நின்று தான் காபி வாங்க வேண்டும். இதனால் நேர விரயமாவதோடு, காபிக்கும் அதிக விலை தரவேண்டியிருக்கிறது. இதை மாற்ற, ரோபோவை காபி தயாரித்து பரிமாற பயன்படுத்தினால் என்ன என, நினைத்தார் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஹென்றி ஹ்யூ.

இந்த யோசனையை ரசித்த இடர் நிதி முதலீட்டாளர்கள் சிலர், ஹென்றிக்கு ஒரு லட்சம் டாலர் வரை முதலீடு தந்தனர். அதைவைத்து மிட்சுபிசி 6-ஆக்சிஸ் ரோபோ ஒன்றை வாங்கி அதற்கு காபி தயாரிக்கும் மென்பொருள் நிரல்களை எழுதி பரிசோதனை செய்தார் ஹென்றி. ரோபோ அருமையாக காபி தயாரிக்கவே, அதை மட்டும் வைத்து, ‘கபே எக்ஸ்’ என்ற ஒரு ‘காபி பூத்’ ஒன்றை அண்மையில் துவங்கியிருக்கிறார் ஹென்றி.

வழக்கமான காபி ஷாப்களில், பணியாளர்கள் காபிக் கோப்பையை இங்கும் அங்குமாக அதிகம் நகர்த்துவதையும், காபியின் பல மூலப் பொருட்களை இயந்திரங்கள் தான் ஏற்கனவே தயாரிக்கின்றன என்பதையும் கவனித்ததால், இதற்கு ரோபோ சரியாக இருக்கும் என்று தீர்மானித்ததாக ஹென்றி சொல்கிறார்.

ஒரே ஒரு ரோபோ கரம் 360 கோணத்திலும் திரும்பி, டிகாக்சன், பால், சுடு நீர், சர்க்கரை, காலிக் கோப்பை ஆகியவற்றை எடுத்து சர், சர் என்று ஒவ்வொன்றாக பிடித்து கலந்து, வாடிக்கையாளர் முன் ஒரு மேடை மீது வைத்துவிட்டு, அடுத்த ஆர்டரை கவனிக்கிறது!

வாடிக்கையாளர்கள், பூத்துக்கு வருவதற்கு முன்பே, கபே எக்சின் மொபைல் செயலி மூலம் ஆர்டர் செய்தால், வந்ததும் காபிக் கோப்பையை எடுத்துக் கொள்ளலாம்.