சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்த தமிழ்சி, ங்கள புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கின்றார்.
தமிழ் மக்களின் தேவைகளை ரணில் அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகக் கூறி புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி சிங்கள புலம்பெயர் சமூகமொன்றும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தேவைக்கு அமைய இந்த சிங்கள புலம்பெயர் அமைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.
எவ்வாறெனினும், இலங்கையின் அரச தலைவர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு போராட்டம் நடத்துவது வெட்கப்பட வேண்டியதொன்று என அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் ஏனைய சிங்கள அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.