தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார்?
தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டுமா? என்ற கேள்விகள் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கின்றன.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறார்கள். கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக அந்த தரப்பினர் கூறுகிறார்கள்.
கலை உலகில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பெரும்பாலான நடிகர்- நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், மன்சூர்அலிகான், ஆர்யா, சித்தார்த், அருள்நிதி, குஷ்பு, சமுத்திரக்கனி, இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், இமான் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இப்போது நடிகர், இயக்குனர் விசு தனது ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வாட்ஸ்- அப் வீடியோவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் கவர்னரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் ஐந்து என்பதை எதுக்கு சொல்வோம். பஞ்ச பூதங்களுக்கு சொல்வோம். அல்லது பஞ்ச பாண்டவர்களை சொல்வோம். இவை பாசிட்டிவ் ஆனவை.
சசிகலாவுக்கு ஏழரை மணிக்கு கவர்னரை பார்க்க நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஏழரை என்பதை எதற்கு சொல்வோம் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். என்னடா இப்படி சொல்லு கிறேன் என்று நினைக்கா தீர்கள்.
நான் 6 வருடங்கள் ஜெயா டி.வி.க்காக மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நடத்தினேன். முதலில் ஒருநாள் மேடம் புரட்சி தலைவியை பார்த்ததோடு சரி. அதற்கு அப்புறம் என்னை ஒரு தடவை கூட பார்க்கவிடவில்லை. அதை என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அப்போ பன்னீர்செல்வம் என்ன கஷ்டப்பட்டாரோ அதே கஷ்டம்தான் எனக்கு. பார்க்கவே முடியவில்லை.
இத்தனைக்கும் பொது மக்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தேன். அப்போ என்ன நடக்குது ஏது நடக்குது என்று சொல்ல வேண்டும். அல்லவா? என்னால் சொல்லவே முடியவில்லை. யார் யாரோ வந்தாங்க. என்னென்னமோ உத்தரவு போட்டாங்க. ஒரு நாள் சொல்வதை மறுநாள் மாற்றி சொல்வான். இப்படித் தான் யாரோ ஒரு குடும்பம் என்னை கட்டுப்படுத்தியது. எனக்கு ஒண்ணுமே புரியல. இப்படி கூட நடக்குமா என்று நீங்க யோசிப்பீங்க.
யோசனை பண்ணி பாருங்க. மேடம் இறந்த போது அந்த பக்கத்தில் யார் நின்னாங்க? யார் யாரோ நின்னாங்க. இதே தான் அங்கேயும் நடந்தது. ஒருவேளை அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தால் அங்கும் யார் யாரோ வருவார்கள் என்ன என்ன வெல்லாமோ செய்வாங்க.
இதை மக்களிடம் ஒன்றும் கேட்க முடியாது. மக்கள் தலையெழுத்து 135 பேரிடம் இருக்கிறது. அவர்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது. பிளீஸ்… பிளீஸ் கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள். சசிகலாவை அல்ல.இவ்வாறு விசு கூறியுள்ளார்.
நடிகர், இயக்குனர் பார்த்திபனும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். சசிகலா முதல்- அமைச்சராக விரும்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இது ஒரு அரங்கேற்றப்பட்ட நாடகம். இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளால் தமிழ்நாட்டின் மரியாதை குறைந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.
நடிகை ஸ்ரேயா, ‘சரியான நேரத்தில் பன்னீர்செல்வம் ஹீரோவாக செயல்பட்டிருக்கிறார்’ என்று கூறியுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், ‘நமது மொழியையும், பண்பாட்டையும் காக்கும் தன்மான தலைவர் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வருகிறார்கள்.