அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!

ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள, ‘ஹேக்ஸ்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.’ஏர்’ (Aire) எனப்படும் இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமான வற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும்.

இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும். பின், இப்போது என்ன வகை உணவை அவர் சாப்பிடலாம் என்ற ஆலோசனையையும் அது தரும்.

நாம் உண்ணும் உணவில் உள்ள பிரக்டோஸ், லேக்டோஸ், சார்பிட்டால் போன்ற வேதிப் பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில்லை. இதனால் வயிற்றிலுள்ள உணவுகள் நொதித்தல் என்ற வேதி வினைக்கு உட்பட நேரிடும். இந்த வினையால் ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து, பின் சுவாசப் பையின் வழியே வெளியேற்றப்படும்.

இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சாதனம் ஒரு ஆறுதல். சிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாத போது, வயிற்று செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.