ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

அப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐபோன் 8 அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பு பணிகள் முன்னதாகவே துவங்குகிறது என கூறப்படுகிறது.

அப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழாவையொட்டி ஐபோன் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் அதிகளவு மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டையும் போன்றே இந்த ஆண்டும் அப்பிள் ஐபோன்கள் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இவற்றின் தயாரிப்பு பணிகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே துவங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
வழக்கத்தை விட சில மாதங்கள் முன்னதாகவே ஐபோன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு துவங்குகிறது என்றும், இம்முறை 300 சதவிகிதம் வரை கூடுதலான சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலாண்டு மொத்த ஐபோன்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 48 மல்லியன் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையி்ல் ஐபோன் 8 தயாரிப்பிற்காக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s மாடல்களின் தயாரிப்புகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 8 வெளியாக இருக்கும் நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம். ஐபோன்களின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான கேமரா இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
அதன் படி ஐபோன் 8இல் 3D டூயல் லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு வழங்கப்படலாம். இதற்கென ஆப்பிள் நிறுவனம் லின்க்ஸ் எனும் இஸ்ரேலிய நிறுவனத்தை சமீபத்தில் கைப்பற்றியது. இந்நிறுவனம் 3D புகைப்படங்கள் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.