மகளிர் மட்டும்’ பட விளம்பரத்துக்காக ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுக்கும் காட்சியை சூர்யா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. இதில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா, நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதை தயாரித்திருக்கும் சூர்யா, சமீபத்தில் ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசரை வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தை பிரபலப்படுத்த வேறு ஒரு வழியையும் சூர்யா கடை பிடித்துள்ளார். இந்த டீசரில் “நாம் லட்சக்கணக்கான தோசை சுட்டு கொடுத்திருக்கிறோம். ஆனால் நமக்கு ஒரு தோசையாவது சுட்டு தந்திருக்கிறார்களா?” என்று ஜோதிகா, ஊர்வசி உள்ளிட்ட 4 பெண்களும் பேசிக்கொள்வது போல் ஒரு காட்சி வருகிறது. சூர்யா, இதை குறிப்பிட்டு “காலம்காலமாக பெண்கள்தான் ஆண்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இனிமேல் ஆண்களும் பெண்களுக்கு வீட்டில் தோசை சுட்டு தர வேண்டும்” என்று அவர் தனது மனைவி ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுக்கும் காட்சியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இது போல் மனைவிக்கு தோசை சுட்டுக்கொடுத்தவர்கள் டுவிட்டரில் பதிவு செய்யலாம் என்று சூர்யா கேட்டுக்கொள்ள, ஏராளமானோர் மனைவிக்காக தோசை சுட்ட காட்சியை டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ‘மகளிர் மட்டும்’ படத்தை பிரபலமாக்கும் சூர்யாவின் ஐடியாவுக்கு பலன் கிடைத்திருக்கிறது.
Eelamurasu Australia Online News Portal