உலகின் இலகுவான கைக் கடிகாரம்!

கிராபீன் என்ற விந்தைப் பொருளைக் கொண்டு, உலகின் மிக எடை குறைவான கைக் கடிகாரம், அண்மையில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லெ என்ற பிரபல கைக் கடிகார நிறுவனமும், மெக்லாரன் எப்-1 என்ற கார் பந்தய அணியும் இணைந்து, இக் கடிகாரத்தை தயாரித்துள்ளன.

கிராபீனை கண்டுபிடித்ததற்காக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள், 2010ல் பரிசை வென்றனர். “ஆர்.எம்.50-30 என்ற இந்த கைக் கடிகாரத்தை தயாரிக்க, கிராபீன் மற்றும் சில பொருட்களைக் கலந்து உருவாக்கிய, ‘கிராப் டி.பி.டி.’ என்ற புதிய பொருளால் மிக இலகுவான, ஆனால், மிக வலுவான பாகங்களை உருவாக்கி, இக் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என மான்செஸ்டர் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ரிச்சர்ட் மில்லெயின் வடிவமைப்பாளர்கள், பிரபலமான ஒரு பந்தயக் காரின், ‘ஷாக் அப்சார்ப’ரின் தோற்றம் தந்த உந்துதலில் ஆர்.எம்.50-30 வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

சிக்கலான பாகங்களைக் கொண்ட இக் கடிகாரத்தின் எடை, வெறும் 40 கிராம் தான்.கிராப் டி.பி.டி.,யை வைத்து தயாரிக்கப்பட்ட கடிகாரத்தின் வெளிப் பாகமும், கைப் பட்டையும், கடினமான அதிர்ச்சி மற்றும் நொறுக்கல் சோதனைகளுக்கு உட்படுத்தியபோதும், சேதாரமடையவில்லை என, மான்செஸ்டர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.