சொந்தக் காணிகளை தம்மிடம் வழங்குமாறு கோரி இன்று (7) கேப்பாப்புலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கேப்பாப்புலவு மக்கள் இரவு, பகலாக இராணுவ முகாமுக்கு முன்னால் தகரப் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டத்தில் மக்களுடன் அவர்களது பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களது கல்வி நடவடிக்கை தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நாளைய தினத்திற்குள் தமது போராட்டத்திற்கு எந்தத் தீர்வும் வழங்காதுவிட்டால், தமது போராட்டத்தின் வடிவம் மாற்றமடையும் என அம்மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தாம் தமது உயிரை மாய்த்தேனும் தமது சொந்தக் காணிக்குள் குடியேறுவோம் எனவும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.
சிறீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகளாக 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளையும், விவசாயக் காணிகளையும் சிறீலங்கா விமானப்படையினர் ஆக்கிரமித்துவைத்துள்ளனர். இதனை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.