அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும்?

அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும் என்று அகதிகள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது.

அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு, சிரிய அகதிகளுக்கு தடை, ஏழு முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை உள்ளிட்ட முடிவுகளை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது.

அகதிகள் ஒப்பந்தம்

*அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் நவம்பர் 2016 அறிவிக்கப்பட்டது. இது ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டம்.

*இது அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான Nauru, Manus Island, Papua Newguinea வில் உள்ள பல நாட்டு அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த போடப்பட்ட ஒருமுறை ஒப்பந்தம். அதே சமயம் Guatemala, Honduras, El Salvador வில் உள்ள அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என அவுஸ்ரேலிய பிரதமர் டர்ன்புல் உறுதியளித்திருந்தார்.

*அவுஸ்ரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், இலங்கை தமிழ் அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

*அவுஸ்ரேலியாவின் கணக்குபடி, மனுஸ் தீவில் 871 அகதிகளும், நவுருவில் 383 அகதிகளுமாக மொத்தம் 1,254 அகதிகள் உள்ளனர். இவர்களையே சட்டத்திற்கு புறம்பான குடியேற்றவாசிகள் என டிரம்ப் இப்போது விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் இருநாட்டு உறவுகளிலும் பிரதிபலிக்கும் என சொல்லப்படுகிறது.

தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அவுஸ்ரேலியாவினுள் அனுமதிப்பது, அவுஸ்ரேலியாவிற்கு கடல் வழியாக தஞ்சமடைய முயற்சிப்பவர்களுக்கு ஊக்கம் அளித்துவிடும் என கூறியே வேறு ஒரு நாட்டில் அகதிகளை குடியமர்த்தும் திட்டத்தை அவுஸ்ரேலியா தெரிவித்து வந்தது.

இதே போன்றதொரு ஒப்பந்தத்தை முன்பு கம்போடியாவுடன் அவுஸ்ரேலியா செய்திருந்தது. கம்போடியாவைப் போல அமெரிக்கவுடனான ஒப்பந்தமும் இப்போது தோல்வி அடைந்துள்ளது. சொந்த நாட்டில் வாழ்வதற்கு அஞ்சி தஞ்சமடைந்த அகதிகளை அரசுகளின் முடிவுகள் மேலும் வதைத்துக் கொண்டிருக்கிறது.