கணவன், மாமியார் வற்புறுத்தலுக்காக திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார்.
நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஆரம்ப காலத்தை விட, இப்போது என்னிடம் மாற்றம் ஏற்பட்டு சவாலான விஷயங்களை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது. வாழ்க்கையும் தெளிவாகி இருக்கிறது. பிரபலமாக இருப்பதால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் இருக்கிறது. அவற்றை சாதகமாகவே எடுத்துக்கொள்கிறேன்.
படங்கள் வெற்றி பெற்றால் அதில் நடித்த கதாநாயகனை புகழ்ந்து பேசுவதையும் கதாநாயகியை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதையும் சகஜமாக பார்க்க முடிகிறது. அதுபற்றி நான் பொருட்படுத்துவது இல்லை. என்னுடையை கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததா? நான் நன்றாக நடித்து இருக்கிறேனா? என்றுதான் சிந்திக்கிறேன்.
இப்போது சினிமாவில் பெண்களும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து உள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்க தொடங்கி விட்டனர்.
என் தந்தையை விட்டு கவுதமி பிரிவதற்கு நீங்கள்தான் காரணமா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. எனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக நான் பேச விரும்பவில்லை. மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பற்றியும் பேசும் பழக்கம் இல்லை.
இதுபோன்ற எதிர்மறை கருத்துக்களில் இருந்து மீண்டு வருவதற்கு கற்றுக்கொண்டு இருக்கிறேன். பாராட்டுகளை எதிர்பார்த்தால்தான் பிரச்சினை. விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் சிக்கலே இல்லை. நான் இப்போதெல்லாம் என் தந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். வளர வளரத்தான் குழந்தைகளுக்கு தாய்-தந்தையரின் மதிப்பு தெரிகிறது.
எனது திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதற்கான நேரம் வரும்போது நடக்கும். திருமணமானதும் நடிகைகள் பலர் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். செய்யும் தொழிலுக்கு திருமணம் தடையாக இருக்க கூடாது என்பது எனது கருத்து. கணவர், மாமனார், மாமியார் விரும்பவில்லை என்பதற்காக நடிப்பை தியாகம் செய்யக்கூடாது.
எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். மனைவியானாலும் தாய் ஆனாலும் சினிமாவை விட்டு விலகமாட்டேன் என்று நினைக்கிறேன். பெண்களை உடல் ரீதியாக பலம் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலமான பெண்களை நினைத்து பார்க்க வேண்டும். உடல் ரீதியான பலத்தை விட பெண்களிடம் இருக்கும் மானசீகமான பலமே சிறந்தது. பெண்களுக்கு ஆண்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.”இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்