அவுஸ்ரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் அவருக்கு டெஸ்ட் தொடரில் சரியான இடம் கிடைக்கவில்லை.
கடந்த வருடம் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு, கடைசி போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டார். தற்போது பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இங்கிலாந்து தொடர் முழுவதும் ரோகித் சர்மா விளையாடவில்லை. தற்போது அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அவுஸ்ரேலியா தொடரில் அணிக்கு திரும்புவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த தொடரை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறேன். எல்லோரும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
ஆனால், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயி்ற்சியாளர் அனில் கும்ப்ளே, ஒரு வீரர் காயத்தால் அணியில் இருந்து விலகினால், அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால்தான் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற கொள்கை உடையவர். இதனால் ரோகித் சர்மா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.