குட்டி கணினிக்கு கூகுளின் கரிசனம்

ராஸ்பெரி பை என்ற பிரிட்டனில் தயாரான கணினிக்கென, கூகுள், தன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சக்தி வாய்ந்த மென்பொருட்களை வெளியிட உள்ளது. ஒரு கடனட்டையின் அளவுக்கே இருக்கும் ராஸ்பெரி பை, அலங்காரமில்லாத, ஆனால் சக்தி மிக்க குட்டிக் கணினி.

2012ல் பிரிட்டனில் வெளிவந்த இந்த கணினி இப்போது உலகெங்கும் பரிசோதனைகள் செய்யவும், புதுமைகள் படைக்கவும் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

விற்பனையில் ஒரு கோடி வாடிக்கையாளர்களை தாண்டிவிட்ட ராஸ்பெரி பை குட்டிக் கணினிக்கு, சக்தி வாய்ந்த மென்பொருட்களை அளிப்பதன் மூலம், ராஸ்பெரி பையின் திறனை மேலும் மேம்படுத்த முடியும் என கூகுள் அந்த பதிவில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எச்.டி.எம்.எல்., ஜாவாஸ்கிரிப்ட், சி.எஸ்.எஸ்., போன்றவற்றில் நிரல்களை உருவாக்கி, பையில் பயன்படுத்தும்
வசதியை கூகுள் உருவாக்கியதுண்டு.

அதேபோல கடந்த, 2016 ஏப்ரல் வாக்கில், ராஸ்பெரி பையிற்கு, கூகுளின் ஆண்ட்ராய்டு திறன் மூல மென்பொருள் வருவதாக பேசப்பட்டது. அப்போது, ”இது நடந்தால் ராஸ்பெரி ஆர்வலர் சமூகத்திற்கு உற்சாகமளிக்கும். இந்த கணினிக்கு பலவித புதிய மென்பொருட்கள் உடனடியாகக் கிடைக்கும்,” என்றார், ராஸ்பெரி பவுண்டேஷனின் நிறுவனர் இபென் அப்டன், ஏனோ, அது இன்று வரை நடக்கவில்லை.

ரூபாய் 3,000 முதல், 5,000 வரை விலையுள்ள இந்த ஆடையில்லா கணினி, மின்னணு ஆர்வலர்கள், மென்பொருள் எழுதுவோரின் கற்பனைகளை துாண்டக்கூடிய மந்திரக்கோலாகி இருக்கிறது.

ரோபோக்கள், டீ போடும் இயந்திரம், ஆளில்லா வீட்டில் பூனைக்கு உணவிடும் சாதனம், வீட்டை கண் காணிக்கும் கேமராக்களை கட்டுப்படுத்தும் கருவி, பலவித இசைக் கருவிகள், கணினி விளையாட்டு கருவிகள், மருத்துவ கருவிகள் என்று பலவற்றை ஆர்வத்துக்கும், தேவைக்கும் ஏற்றபடி உருவாக்குகின்றனர்.