முதலமைச்சராகிறார் சசிகலா!

சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

பொதுச்செயலாளர் பதவியும், முதல்-அமைச்சர் பதவியும் ஒருவரிடத்தில் தான் இருக்க வேண்டும். அதன்படி சசிகலா முதல்- அமைச்சராவது தான் சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள். மூத்த நிர்வாகிகள் பலரும் இதே கருத்தை ஆதரித்தனர். இதனால் எந்த நேரத்திலும் சசிகலா முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், கட்சியின் பல்வேறு நடைமுறைகள் அமைந்தன.

இந்நிலையில் சசிகலா இன்று கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சரும் கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்ததையடுத்து சசிகலா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, சசிகலா விரைவில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதேசமயம் முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.