அதிர்ச்சியில் அவுஸ்ரேலிய பிரதமர்!

அவுஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இணைப்பை பாதியிலேயே துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 45 வது அதிபராக டொனல்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் டிரம்ப்.

அந்த வகையில் அவுஸ்ரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவுஸ்ரேலியாவிடம் தஞ்சம் புகுந்த சிரியா உட்பட மேற்காசிய நாட்டு அகதிகளில் 1,250 பேரை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தது பற்றி பேசியதாக தெரிகிறது. மேலும் அகதிகளை ஏற்பது குறித்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த டிரம்ப் அகதிகளை ஏற்பது இன்னொரு பாஸ்டன் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்குச் சமம் என்று ஆவேசமாக கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஆவேசமாக சில நிமிடங்கள் பேசிய டிரம்ப், 25-வது நிமிடத்தில் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அவுஸ்ரேலிய பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என கூறப்பட்டுகிறது.