அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகு பயணத்தை தொடங்கியது

நெடுந்தாரகைக்கு புதிய கப்டன் நியமிக்கப்பட்டதனையடுத்து நேற்று முன்தினம்(2) முதல் அதன் சேவையை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவல அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

நெடுந்தீவு மக்களின் பயண பயன்பாட்டிற்காக நெல்சிப் திட்டம் மற்றும் அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகானது கடந்த மாதம் 20ஆம் நாள் தனது முதல் உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பித்தபோதும் அதற்கான நிரந்தர அனுபவம் வாய்ந்த ஒரு கப்டன் தர அதிகாரி இன்மையால் அனுபவம் அற்ற புதிய பணியாளர்களை மட்டும் கொண்டு சேவையில் ஈடுபடுவதனால் பயணிகளின் பாதுகாப்பில் கேள்வி எழுப்பப்படும் எனக் கருதி குறித்த படகுசேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் முயற்சியினால் தற்போது குறித்த படகிற்கு ஓர் அனுபவம் வாய்ந்த கப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பயனாக நெடுந்தாரகைக்கு ஒரு கப்டன் நியமிக்கப்பட்டதனையடுத்து நேற்று முன்தினம் அதன் முதல்  சேவை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள படகுசேவையானது நெடுந்தீவு பிரதேச சபையின் கீழ் உள்ளூராட்சித் திணைக்கள மேற்பார்வையில் தனது பணியை நடாத்தும் அதேவேளையில் இதற்காக பயணிகளிடம் 80 ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.