விஜய் அன்ரனி தனது படத்தின் அடுத்த படத்துக்கு திமுக தலைவர் ஒருவரின் பெயரை தலைப்பாக வைத்துள்ளார்.
விஜய் அன்ரனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் தலைப்பை வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். யாரும் தேர்ந்தெடுக்க தயங்கும் தலைப்புகளை தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வரிசையில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ ஆகிய படங்கள் விஜய் அன்ரனிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.
இந்நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘எமன்’ படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் அன்ரனி அரசியல்வாதியாக நடிக்கிறார். வருகிற பிப்ரவரி 24-ந் திகதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், விஜய் அன்ரனி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
‘எமன்’ படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய அடுத்த படத்துக்கு மறைந்த திமுக தலைவர் ‘அண்ணாத்துரை’யின் பெயரை தலைப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ராதிகா சரத்குமார் தனது பேனரில் தயாரிக்கிறார். சீனு வாசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal