அவுஸ்ரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுரை!

சுழற்பந்தை உங்களால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யாதீர்கள் என்று அவுஸ்ரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் கெவிட் பீட்டர்சன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்போது 338 ரன்கள் குவித்தவர் பீட்டர்சன்.

இந்த மாதம் 23-ந்தேதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவுஸ்ரேலிய வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் அந்த அணி 2004-ற்குப்பிறகு ஆசியாவில் 20 டெஸ்டில் மூன்றை மட்டுமே வென்றுள்ளது. அதில் இரண்டு வங்காள தேசத்திற்கு எதிரானதாகும். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது.

இந்நிலையில் அவுஸ்ரேலியா இந்தியாவில் வந்து விளையாடுவது குறித்து பீட்டர்சன் கூறுகையில், இந்திய மண்ணில் உங்களால் சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால், இந்தியா செல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சுழற்பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால், இந்தியா செல்ல வேண்டியதில்லை. நீங்கள் இந்தியாவிற்கு வரும்போது அதற்கென பயிற்சி எடுத்துக் கொள்வீர்கள்.

நீங்கள் அதற்கான பொதுவான பயிற்சியை அவுஸ்ரேலியாவிலேயே எடுத்துக் கொள்ளலாம். அவுஸ்ரேலியாவில் என்னால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

உங்களால் முடியும், நீங்கள் சுழற்பந்து விக்கெட்டில் சுழற்பந்தை சரியான முறையில் விளையாட வேண்டிய தேவையில்லை அல்லது சுழற்பந்தில் பயிற்சி எடுக்க வேண்டிய தேவையில்லை.. சரியாக லைன் மற்றும் லென்த் எடுத்து உங்கள் காலை கொண்டு சென்றால்  நீங்கள் எதவிதமாக ஆடுகளத்திலும் விளையாட முடியும்.

இங்கிலாந்து வீரர்களை போல் நீங்கள் விளையாடினால் நிச்சயமாக தோற்றுப் போவீர்கள். காலை அதிக அளவில் முன்வைத்து விளையாடக் கூடாது. பந்திற்காக காத்திருந்து அதன்பின் விளையாட வேண்டும். பந்து எங்கே பிட்ச் ஆகிறது என்பதை பார்த்து அதன்பின் விளையாட வேண்டும். யாரோ ஒருவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பந்தை உங்களால் எதிர்கொண்டு நல்ல நிலைமைக்கு வர முடியும் என்றால், 50 மைல் வேகத்தில் வீசும் பந்தை உங்களால் எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.