அவுஸ்ரேலியாவில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அணிவதைத் தடை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் ஆளுங் கூட்டணி தீர்மானித்துள்ளது. தலையை மறைக்கும் துணி மற்றும் ஏனைய மத அடையாளங்களை அரச ஊழியர்கள் அணிந்து வருவதைத் தடை செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
அவுஸ்ரேலியாவில் வேகமாக வளர்ந்துவரும் தீவிர வலது சாரி சுதந்திரக் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசின் இந்த நடவடிக்கை கள் நோக்கப்படுகின்றன.
இந்த தடையானது பாடசாலை மற்றும் நீதிமன்றம் போன்ற இடங்களில் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவிலுள்ள, முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணியும் சுமார் 150 பெண்களை இத்தடை பாதிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
பல சீர்திருத்தங்கள் அடங்கிய தொகுப்பினை அறிவித்த ஆளுங்கூட்டணி, கண்களை மட்டுமே வெளிக்காட்டும் நிகாப் மற்றும் முகம் முழுவதையும் மறைக்கும் புர்கா போன்ற இஸ்லாமியரின் ஆடைகளைத் தடை செய்ய உத்தேசித்துள்ள திட்டம் குறித்து இரண்டு வரிகளில் மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படலாம் என நம்புவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் திறந்த தொடர்பாடலுடனான திறந்த சமுதாய முறைமைக்கு உறுதி பூண்டுள்ளோம். பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை இதற்குக் குறுக்கீடாக உள்ளது.
எனவே, அதை நாம் தடை செய்துள்ளோம் “என அவுஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகியனவும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைக்கு 2011ஆம் ஆண்டு தடையை விதித்திருந்தன. சட்ட ரீதியாக சாத்தியமானால், ஜேர்மனியிலும் இத்தகைய ஆடையை அணிவது தடை செய்யப்பட வேண்டும் என ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கெல் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.