மத்திய பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ரோஜா கூறியதாவது:-
ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக உள்ளனர். ஆனால் பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.
ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்துக்கான அறிவிப்பு இல்லை. ஆனால் தெலுங்கு தேச மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், பட்ஜெட்டை பாராட்டி மேஜை தட்டுகிறார்கள்.
இந்த பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்துக்கு தேவையானவற்றை கேட்டு பெறாமல் மவுனமாக இருக்கிறார். அவர் மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு இருப்பதால் மத்திய அரசிடம் சலுகைகளை கேட்பதில்லை. ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள்போராடி வெற்றி பெற்றனர்.
அதுபோல் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக ஆந்திர மக்கள் போராட வேண்டும். நாம் தான் போராடி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.