அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின் இறுதியில் கையெழுத்தான அவுஸ்ரேலிய-அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்பது தொடர்பான அச்சமும் நிலவி வந்தது.
இந்த நிலையில், அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒரு முறை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் உடனான 25 நிமிட தொலைப்பேசி உரையாடலில் இதை அவர் உறுதிப்படுத்தியதாக இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும் அமெரிக்க தரப்பிலிருந்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கடல் வழியே அவுஸ்ரேலியவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அவுஸ்ரேலிய அரசு அண்மையில் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.