எனது முதல் ரசிகை என் மனைவி தான் என்று அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய பெடரர் ரோஜர் பெடரர் பேட்டியளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். மொத்தத்தில் 18-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அவருக்கு அமைந்தது.
தாயகம் திரும்பிய 35 வயதான பெடரருக்கு சொந்த ஊரில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அளித்த ஒரு பேட்டியில், தனது ‘நம்பர் ஒன்’ ரசிகர் யார்? என்றால் அது தனது மனைவி மிர்கா தான் என்று பெடரர் பெருமையோடு குறிப்பிட்டார்.
மிர்காவும் சுவிட்சர்லாந்துக்காக சர்வதேச டென்னிஸ் விளையாடியவர் தான். பெடரரை விட 3 வயது மூத்தவர். காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெடரர்-மிர்கா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் என்று 4 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மனைவி குறித்து பெடரர் கூறுகையில், ‘நான் எந்த வித பட்டமும் வெல்லாத போது மிர்கா என்னுடன் இருந்தார். இப்போது 89 பட்டங்களை வென்ற பிறகும் அவர் என்னுடன் இருக்கிறார். எனது வெற்றியில் அவரது பங்கு அளப்பரியது என்பதை அனைவரும் அறிவர். ஒரு அம்மாவாக, நல்ல மனைவியாக, அதன் பிறகு எனக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவும் இருக்கிறார். அவர் தான் எனது நம்பர் ஒன் ரசிகை என்று சொல்வேன்.
அவர் டென்னிஸ் ஆடிய காலத்தில் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதுவே அவருக்கு கெட்டப்பெயரையும் ஏற்படுத்தியது. இதனால் அவர் டென்னிசை விட்டு விலகுவதே சரியானதாக இருக்கும் என்று நினைத்தேன். அது தான் அவருக்கும் மகிழ்ச்சி. எந்த சூழ்நிலையிலும் அவர் என்னிடம் உண்மையைத் தான் பேசுவார். அது தான் நாங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம்’ என்றார்.