அவுஸ்ரேலிய ஓபன்: பீட்சாம்ராஸ் சாதனையை நடால் முறியடிப்பாரா?

அவுஸ்ரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- ரோஜர் பெடரர் இன்று (29) மோதுகிறார்கள், இதில் பீட்சாம்ராஸ் சாதனையை ரபெல் நடால் முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் உலகின் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) மற்றும் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தொடக்கத்திலேயே வெளியேறி முன்னாள் நம்பர் ஒன் வீரர்களான நடாலும், பெடரரும் மோதுவது ஆச்சரியமானது. ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பதை இருவரும் நிரூபித்துவிட்டனர். டென்னிஸ் உலகில் இந்த இருவரும் பரம்பரை எதிரிகளாக கருதப்படுகின்றனர்.

31 வயதான ரபெல் நடால் 21-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இதில் 14 கிராண்ட்சிலாம் வென்றுள்ளார்.

அவுஸ்ரேலிய ஓபன் பட்டத்தை 1 முறையும் (2009), பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 9 தடவையும் (2005-2008, 2010-2014), விம்பிள்டன் (2008, 2010), அமெரிக்க ஓபனை (2010, 2013) தலா 2 முறையும் கைப்பற்றி உள்ளார்.

பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றால் அவர் அதிக கிராண்ட்சிலாம் வென்றவர்களில் 2-வது இடத்தில் இருக்கும் பீட் சாம்ராஸ் (அமெரிக்கா) சாதனையை முறியடிப்பார். வெற்றி பெற்றால் சாம்ராசை முந்தி 15 கிராண்ட் சிலாமுடன் 2-வது இடத்தை பிடிப்பார். ஒட்டு மொத்தமாக 15-வது பட்டத்துக்காகவும், ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது பட்டத்துக்காகவும் அவர் காத்திருக்கிறார்.

நடால் கடைசியாக 2014 பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றார். இதன் பிறகு அவர் பட்டம் வெல்ல வில்லை. கால்இறுதி வரையே நுழைந்து இருந்தார்.

36 வயதான ரோஜர் பெடரர் 28-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இதில் 17 கிராண்டசிலாம் வென்று சகாப்தமாக திகழ்கிறார்.

பெடரர் அவுஸ்ரேலிய ஓபனை 4 தடவையும் (2004, 2006, 2007, 2010), பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 1 முறையும் (2009), விம்பிள்டனை 7 தடவையும் (2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012) அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறையும் (2004-2008) கைப்பற்றி உள்ளார்.

தற்போது 18-வது கிராண்ட் சிலாமை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். பெடரர் கடைசியாக 2012-ம் விம்பிள்டன் பட்டத்தை பெற்றார். அதன்பிறகு 3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று இருந்தார்.

இருவரும் நேருக்கு நேர் மோதிய ஆட்டத்தில் நடால்-23, பெடரர் 11-ல் வெற்றி பெற்று உள்ளனர். கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டியில் இருவரும் 8 முறை மோதியுள்ளனர். இதில் நடால் 6 தடவை வென்றுள்ளார். பெடரர் 2 முறை வென்றார். இன்று இருவரும் மோதுவது 9-வது கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டியாகும்.

2008 விம்பிள்டன், 2009 அவுஸ்ரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் பெடரரை 4½ மணி நேரம் போராடி நடால் வென்றது மறக்க இயலாது ஒன்றாகும்.

பலம் வாய்ந்த இருவரும் மோதும் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக அமையும்.